சென்னை | மார்ச் 11:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 70 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களம் காண உள்ள 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு போட்டியிடுகிறார். அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும், பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
திருவெறும்பூர் தொகுதியில் முருகானந்தமும், மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று எழும்பூரில் பிரியதர்ஷினி, பெரம்பலூரில் பொன்னுசாமி, ஆர்.கே நகரில் பாசில், காஞ்சிபுரம் தொகுதியில் கோபிநாத் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைதாபேட்டை தொகுதியில் ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பை நடத்தி வரும் சினேகா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒசூரில் மசூத், பழனியில் பூவேந்தன், திருமங்கலத்தில் திரைப்பட விநியோகிஸ்தர் ராம்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சி தேமுதிகவை- கூட்டணிக்கு அழைத்திருக்கும் நிலையில், அங்கிருந்து பதில் வரவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார்.
– நன்றி : நியூஸ் 18 தமிழ்