கோலாலம்பூர் | ஜூன் 10 :-

முந்தைய வாரங்களைக் காட்டிலும் கடந்த வாரம் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டில் இன்னும் கோவிட்-19 தொற்று நிலை பாதுகாப்பானதான நிலையில் இல்லாதச் சூழலில் அதற்கானப் பரிசோதனை எண்ணிக்கை தற்சமயம் குறைந்துள்ளது.

இதனால் கடந்த மே 23 முதல் மே 29 வரையில் 6.89 விழுக்காடாக இருந்த தொற்றுப் பரவல் நிலை மே 30 முதல் ஜூன் 5 ஆம் நாள் வரையிலானக் கணக்கெடுப்பில் 7.28 ஆக உயர்ந்துள்ளது.

மே 23 முதல் 29 வரையிலானக் காலத்தில் 774,973 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 53,419 பேருக்குத் (6.89 %) தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கு அடுத்த வாரத்தில், அதாவது மே 30 முதல் ஜூன் 5 வரையிலானக் காலக் கட்டத்தில், 715,223 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 52,040 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அவ்வெண்ணிக்கையில் 7.28 % ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 59,750 பரிசோதனைகள் குறைந்திருந்தாலும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

இந்தப் பரிசோதனை எண்ணிக்கை குறித்து பல தரப்பினரின் பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்ற பரிசோதனை எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா ? மொத்தப் பரிசோதனை எண்ணிக்கையில் 10%க்கும் குறைவாக தொற்று உறுதி செய்யப்படுகின்ற எண்ணிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என அரசு தரப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்ற நிலையில் அது 5%க்கும் குறைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தனியார் தரப்பு கூறிவருகிறது.

கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் மாற்றம் கண்டு வருகிறது. அவ்வெண்ணிக்கை வார இறுதிகளிலும் பொது விடுமுறை காலத்திலும் மேலும் குறைகிறது. பின்னர் வார நாட்களில் வழக்கு நிலைக்குத் திரும்புகிறது.