கோலாலம்பூர் | ஜூன் 13 :-

அன்றாட கோவிட்-19 நேர்வுகள் 4,000ஆகக் குறைந்தால், கடந்த ஜூன் 1 முதல் நடப்புக்கு வந்த மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகள் (எஸ்.ஓ.பி.) மறு ஆய்வு செய்யப்படும் என தற்காப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஆனால், அது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை முழுதாய் முடிப்பதாகாது. தளர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.

இது குறித்து சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அதாம் பாபா, சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர் தம்மிடம் பேசியதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அன்றாட கோவிட்-19 நேர்வுகள் 4,000 ஆகக் குறைகின்ற நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.