கோலாலம்பூர் | ஜூன் 13 :-

நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியின் கீழ் உள்ள மூன்று மாநிலங்களும் தங்களின் சட்டமன்றக் கூட்டத்தை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும் என ஜ.செ.க. கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியில் தற்பொழுது சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அம்னோவின் ஆட்சியில் இருக்கும் பகாங் மாநிலமும் இதையே செய்வதாக நம்பிக்கைக் கூட்டணியின் உச்சமன்றத்தின் துணைத் தலைவர் லிம் குவான் எங் கூறினார்.

தற்போதைய ஆளும் கட்சியான தேசியக் கூட்டணி பகாங் மாநில சட்டமன்றம் கூடுவதற்கு அம்னோவை அனுமதித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய லிம் குவான் எங், சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள விவகாரங்களின் கேள்விகளைத் தயாரித்து தயார் நிலையில் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் பிரதிநிதிகள் மட்டும் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கூட வேண்டும் எனக் கூறவில்லை. மாறாக, மக்களும் அதையேத்தான் விரும்புகிறார்கள் என லிம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே, விதிமுறைகளாஇப் பின்பற்றி நேரடியாக நாடாளுமன்ற – சட்டமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வது என்பது சிரமமாக இருக்காது.

எதிர்வரும் ஆகஸ்டு 16 முதல் 20 வரையில் பகாங் மாநில சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என கடந்த மே 25 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும், ஊரடங்கு நீட்டிக்கப்படாத நிலையில் தான் பகாங் மாநில சட்டமன்றாக் கூட்டம் நடைபெறும் என அம்மாநில அரசாங்கத்தின் செயலாளர் ஷேட் அகமாட் கிருலன்வார் ஷேட் அப்துல் ரஹ்மான் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இரு வார கால அவகாசத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் கேள்விகளை எழுத்து வடிவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியின் கீழ் உள்ள நிலையில் பேரா, ஜோகூர், மலாக்கா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் அம்னோவின் கீழ் உள்ளன.

தங்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் மாநிலங்கள் ஒரே மாதிரி சட்டமன்றக் கூட்டங்கள் நடத்த அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதா எனக் கேட்டதற்கு, நாட்டின் மக்களாட்சி முறையைக் குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க இரண்டு கட்சிக் கூட்டணிகளும் செயல்படும் என லிம் கூறினார்.

உலகின் பல நாடுகளில் இன்னமும் தடுப்பூசி முழுதாகப் போடப்படாத நிலையிலும் அந்நாட்டு அரசாங்கங்கள் செயல்படத் தொடங்கி விட்டன. தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள மக்கள் பிரதநிதிகள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது என லிம் கூறியுள்ளார்.