சுங்கைப் பட்டாணி | 4/7/2021 :-
வேலை, வருமான பாதிப்பினால் வாழ்க்கைச் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் வெள்ளைக் கொடி ஏற்றுவதன் மூலம் சம்பந்தப்பட்டக் குடும்பங்களை அடையாளம் காணும் முயற்சிக்கு கெடா மந்திரி பெசார் எச்சரிக்கை விடுத்திக்கிறார்.
நாட்டில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கடந்த ஆண்டின் முற்பகுதியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தன்னார்வக் குழுவினர் பல சிரமங்களுக்கிடையே பல மாநிலங்களிலும் நலிந்த குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கினர்.
இவ்வாறு உதவிக்கரம் நீட்டியதில் எம்ஏபி-உடன் அதிகமான அரசுசாரா அமைப்பினரும் சமூக நோக்கம் கொண்டவர்களும் கைகோர்த்து அயராமல் அதிகபடியாக பாடுபட்டனர். அந்த நேரத்தில் புதிதாக அமைந்த இப்போதைய அரசின் உதவிகூட அனைத்து மக்களுக்கும் சென்றடையவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. பொருத்தமான நேரத்தில் சமூக அக்கறை கொண்டவர்களின் உதவி கிடைக்காமல் இருந்திருந்தால் அந்த மக்கள் பசி-பட்டினியை எதிர்கொண்டிருக்கக்கூடும்.
ஏற்கெனவே ‘வாயிற்கும் கையிற்கு’மான சிரமத்தை எதிர்நோக்கி இருந்த மக்கள், திடீரென வருமான பாதிப்புக்கு இலக்கானதால் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களை அடையாளம் கண்டு உரிய நிவாரணம் வழங்க அரசு தவறிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் மக்களே மக்களுக்கு உதவிக் கொள்ளும் வெள்ளைக்கொடி இயக்கத்திற்கு அரசியல் சாயம் பூசும் முகமட் சனூசியின் நடவடிக்கை மூர்க்கத்தனமானது; உணர்வற்றது மட்டுமல்ல. பசிப் பிணியைப் போக்க முற்படும் சேவையாளர்களைக் கொச்சைப்படுத்தும் சிறுமைத்தனமும் ஆகும்.

மந்திரி பெசார் சொல்லிக் கொள்வதைப் போல மாநில நிருவாக இயந்திரம் உண்மையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருந்தால், உதவிக் கரத்தை எதிர்பார்த்துப் பரிதவிக்கும் குடும்பங்களைப் பற்றியத் தகவல சமூக ஊடகங்களில் பரவி வராது.
எனவே, முகமட் சனூசி, வெள்ளைக்கொடி இயக்கம் குறித்த தன் போக்கை மாற்றிக் கொண்டு வட்டார சமூகத்தினர் மேற்கொள்ளும் உதவிக்கு உறுதுணையாக இருப்பதுடன் தன்னார்வை சேவையாளர்களையும் மதிக்க முன்வர வேண்டும் என மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபியின் கெடா மாநிலத் துணைத் தலைவர் ஏ.விவேக் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி இயக்கத்தில் ஈடுபட்டுள்ளத் தனிப்பட்டவர்களுக்கும் பொது அமைப்பினருக்கும் எம்ஏபி சார்பில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, வெள்ளைக் கொடி இயக்கத்தினருக்கு உடனுக்குடன் தகவலைப் பரிமாறும் இணையவாசிகளாஇயும் தாம் பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


