புத்ராஜெயா | 4/7/2021 :-
பள்ளிகள் மூடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அதனால் பாதிக்கப்பட்ட சிற்றுண்டிச் சாலைகள் நடத்துநர்கள் இம்மாதம் தொடங்கி அடுத்த 6 மாதங்களுக்கு வாடகை செலுத்து வேண்டியதில்லை எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் இயங்கும் சிற்றுண்டிச் சாலைகள், புத்தகக் கடைகள், கூட்டுறவுக் கழகங்கள், சலவை நிலையங்கள் ஆகியன இந்தச் சலுகைக்குத் தகுதி பெறுகின்றன.
மேலும், அவ்விடங்களுக்கான ஒப்பந்த காலம் முடிவடைகின்ற நிலையில் மேலும் ஓராண்டு ஒப்பந்தம் தானாகவே நீட்டிக்கும் சலுகையும் கல்வி அமைச்சு வழங்குவதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட உணவு விநியோகிப்பு குத்தகையைக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் பாதிக்கபட்டக் கால அளவைக் கணக்கில் கொண்டு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
மேலும், கட்டடங்கள் – சுற்றுப்புறத் தூய்மை குத்தகையாளர்களுக்கும் ஒப்பந்தப்படி முழு கட்டணத்தை கல்வி அமைச்சு செலுத்தும். இதனால், பள்ளிகளின் துப்புரவு ஊழியர்களுக்கு அந்தக் குத்தகை நிறுவனங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டியதில்லை.
கல்வியமைச்சின் இந்த முன்னெடுப்பானது பள்ளிக்கூடங்களில் சேவை வழங்கும் குத்தகையாளர்களும் அதன் ஊழியர்களும் எதிர்கொண்டிருக்கிற நெருக்கடிக்கு பேருதவியாக இருக்கும்.
தேசிய மீட்சித் திட்டத்தின் அடிப்படையில் கல்வித்துறை மீண்டும் வழக்கு நிலைக்குத் திரும்ப இன்னும் இரு மாதங்கள் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


