டாமான்சாரா | 10/7/2021 :-
வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற இரக்கமற்றச் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வுலகில் நம்மைப் போல விலங்குகள் வாழ்வதற்கும் உரிமை உள்ளது என்பதை இவற்றைச் சித்ரவதை செய்வோர் புரிந்து கொள்ள வேண்டும். விலங்குகளால் பேச முடியாது என்பதற்காக விருப்பப்படி அவற்றைக் கொடுமைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்று சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பின் (சாஸ்தா ) தலைவர் ராம்ஜி தெரிவித்தார்.
“ சில தினங்களுக்கு முன்பு கெடா, கூலிம் நகராண்மைக் கழக அதிகாரிகள் மடிந்து போகும் அளவுக்கு வாயில்லா ஜீவன் ஒன்றைக் கொடுமைப்படுத்திய சம்பவம் உண்மையில் கண்டிக்கத்தக்கது. மனிதனுக்கு இருக்கும் அதே வலியும், வேதனையும்தான் விலங்குகளுக்கும் இருக்கும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறியது ஏன்? இந்தச் செயலுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.
நமக்கு இருக்கும் உரிமை இந்த ஜீவன்களுக்கும் உண்டு. இத்தகைய கொடூர செயல் இனியும் நாட்டில் தொடரக் கூடாது. ஆகையால் இதற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று அனேகனிடம் ராம்ஜி விவரித்தார்.
இச்சம்பவத்திற்கு எதிராக 2015 விலங்கு நல சட்டத்தின் கீழ் கூலிம் நகராண்மைக் கழகமும் போலீசும் உடனடியாக புலனாய்வு நடத்த வேண்டும் என்று விலங்கு உரிமைக்கான வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, வட்டி முதலைகளின் தொல்லைகளில் சிக்கித் தவித்தோர், பல்வேறு விவகாரங்களினால் நிம்மதி இழந்தோர் என இதுவரை 1,000திற்கும் மேற்பட்டோரின் பிரச்னைகளுக்கு சாஸ்தா வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளதாக ராம்ஜி கூறினார்.
நாடு முழுமையும் உள்ள மக்களுக்கு உதவி புரிய சாஸ்தா தயாராக இருப்பதாகவும் இந்த வாய்ப்பை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மக்களுக்குச் சேவையாற்றத் தொடங்கிய சாஸ்தா 2019 ஆம் ஆண்டு பதிவு பெற்ற ஓர் அமைப்பு என்ற அங்கீகாரத்தோடு தனது சேவையைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தனது 17 வயதில் தொடங்கியதாகக் குறிப்பிடும் ராம்ஜி “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதற்கேற்ப மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அவர்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளார். தொடர்புக்கு 03-77325502, 03-77325503,012-5155249.


