கோலாலம்பூர் | 22/7/2021 :-
முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா-வுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தப் பின்னர் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் தமிழர்களும் அவர்களது உடைமைகளும் குறி வைத்து தாக்கப்படுவதாக அனைத்துலக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
தென்னாப்பிரிக்க மொத்த மக்கள் தொகையில் 2.5% உள்ள தமிழர்கள் அங்கு திறனாளர்களாகவும் தொழில் முனைவர்களாகவும் இருந்து வருகின்றனர். பல தொழில் முனையங்களை வெற்றிகரமாகவும் செயல்படுத்தி தென்னாப்பிரிக்க சமூகத்துக்கு பயன் தருவிக்கும் மக்களாக இருந்து வருகின்றனர்.
இதற்கிடையில் தீர்ப்புக்குப் பின்னர் நடக்கும் கலவரத்தில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் நூற்றுக்கணக்கானவர் காயமுற்றிருப்பதும் செய்திகள் வழியாக அறிகின்றோம். தமிழர்கள் உட்பட இதர இந்தியர்கள் தாக்கப்படுவதைக் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய பிறகும் கூட தாக்குதல்கள் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல்களின் தன்மை முழுக்க முழுக்க இன துவேசம் கொண்டதாக உள்ளது.
இதன் பொருட்டு மலேசியத் தமிழ் வேங்கை இயக்கம் மலேசியாவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் நலன் காக்க எழுத்துப்பூர்வமான வலியுறுத்தலையும் வழங்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் தமிழர்கள் மீது ஏவப்படும் இன ரீதியிலான தாக்குதல் தென்னாப்பிக்காவின் நற்பெயரைக் கலங்கப்படுத்துவதோடு உலகத்தமிழர்களின் கடுமையான கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும் என கோடிக்காட்டப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழுமத்தின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

