கோலாலம்பூர் | 17/12/2021 :-

தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கல் குறித்து சிறப்புக் குழுவைக் காவல் துறை அமைக்கும் என உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் அறிவித்ததை ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பதாகக் கூறினார்.

அடுத்தாண்டு முதல் தேதி முதல் செயல்பட இருக்கும் அந்தப் பிரிவுக்கு தடுப்புக் காவல் மரண விசாரணைக் குழு (Unit Siasatan Jenayah Siasat Kematian Tahanan – USJKT) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இனிமேல் இது போன்ற தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க உள்துறை அமைச்சு எடுத்திருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று.

காவல்துறையில் சூப்ரிடெண்டண்ட் பதவியில் இருக்கும் ஒருவர் அந்தப் பிரிவுக்குத் தலைமையேற்க 12 காவல் துறை அதிகாரிகளும் ஒரு அரசுத் துறை அதிகாரியும் அங்கம் வகிப்பர்.

ஆனால், காவல்துறை தடுப்புக் காவலில் ஏற்படும் மரணச் சம்பவங்களைத் தடுக்கும் சிறப்புப் பிரிமை காவல் துறையின் கீழ் அமைக்கப்படுவது குறித்து சில தரப்பினர் சாடி வந்தனர். அதில் நடத்தப்படும் விசாரணை நியாயமாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பி வந்தனர்.

இருப்பினும், இந்த சிறப்புப் பிரிவை பற்றி குறை கூறுவதை சில தரப்பினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தப் பிரிவு முதலில் தனது கடமையை மேற்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

ஒருவேளை அவர்களின் பணி திருப்திகரமாகவும் ஆக்ககரமாகவும் இல்லை என்றால், அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அவர் கூறினார்.

தடுப்புக்காவலில் குறிப்பாக இந்தியர்களின் மரண சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அண்மையில் மனித உரிமை ஆணையம் இவ்விவகரம் குறித்து சாடி இருந்தது.