கோலாலம்பூர், செப்.22-

பத்துமலை திருத்தலத்தின் படிகட்டுகளில் ஏறும் சுற்றுப் பயணிகள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கட்டுமானப் பொருட்களை மேலே கொண்டு செல்கின்றனர். மாறாக, அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

கட்டுமான பொருட்களை மேலே கொண்டு செல்லும்படி நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சுற்றுப்பயணிகளும் பக்தர்களும் தங்களின் விருப்பத்தின் பேரில் இதனை செய்வதாக அவர் கூறினார். இவர்களது இச்செயல் அவர்கள் கொண்டிருக்கும் நற்பண்புகளையும் கோவில் திருப்பணிகள் வெகு சீக்கிரமாக முடிய வேண்டும் என அவர்கள் நினைப்பதைக் காட்டுகின்றது. அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

பத்துமலை திருத்தலத்தில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் வேளையில் சுற்றுப்பயணிகளும் பக்தர்களும் கற்கள், மணல், சிமெண்ட் ஆகியவற்றை மேலே எடுத்து செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இச்செயலை அவர்கள் விரும்பியும் மகிழ்ச்சியாகவும் செய்கிறார்கள். இச்செயல் இறைவனுக்கு செய்யும் ஒரு புனிதமான செயல் என கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் கட்டாயத்தின் பேரில்தான் இவ்வாறு செய்வதாக சில தரப்பினர் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக தமது அறிக்கையின் வாயிலாக டான்ஸ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.