சென்னை, ஏப் 1-

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே. சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட மகளிர் தொண்டரணிஅமைப்பாளர் ராஜேஸ்வரி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியை முனைவர் பர்வின் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

டத்தோஸ்ரீ சரவணன் உரையாற்றுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் நண்பர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் எத்தகைய மனிதநேயமிக்க அரிய மனிதர் என்பது அவரது ஒவ்வொரு செயலும் நமக்கு உணர்த்துகிறது. ஆளுமைமிக்க ஒரு தலைவரை நீங்கள் முதல்வராக பெற்றுள்ளீர்கள். அவர் ஒவ்வொரு நிமிடமும் மக்களையே எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு எத்தகு நல்ல விஷயங்களைத் தருவது என்பது குறித்து சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தான் மட்டுமல்லாமல் துறைசார் அதிகாரிகளையும் முடுக்கி பணியாற்ற செய்து வருகிறார்.

அவரோடு அமீரகதில் சில நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்பினை நான் பெற்றேன். தமிழகத்தில் மாத்திரமல்ல, அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியை என்னால் காண முடிந்தது. உண்மையில் மக்கள் முதல்வராகவே அவர் வாழ்கிறார். மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு நான் உள்ளபடியே பெரிதும் மகிழ்கிறேன்.

அருமையான ஏற்பாட்டை செய்த அமைச்சர் நண்பர் சேகர் பாபுவுக்கும் இதர நண்பர்களுக்கும் நான் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உரையாற்றினார்.