ஈப்போ | 2/4/2022 :-

நாட்டின் முதன்மை தமிழ் எழுத்தாளர் சங்கமான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவ்வாண்டு 60ஆம் ஆண்டு மணிவிழாவினை கொண்டாடும் வேளையில் அச்சங்கத்திற்கு தமிழகத்தின் தமிழ்த் தாய் விருது எனும் உயரிய விருது கிடைத்திருப்பது பெரும் அங்கீகாரமாகவும் போற்றுதல்குரிய நனிசிறப்பின் உச்சமாகவும் கருதுவதாக பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புகழாரம் சூட்டியது.

மணிவிழா கொண்டாடவிருக்கும் சங்கத்திற்கு மணிமகுடம் சூட்டுவது போல் அமைந்திருக்கும் இவ்விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மட்டும் உரியதாக கருதவில்லை எனவும்,இவ்விருது மலேசியாவின் ஒட்டுமொத்த எழுத்தாளர்களுக்கும் படைப்பாளர்களும் உரியதாகவே பேரா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமிதம் கொள்வதாக அதன் தலைவர் தமிழ்த்திரு முனைவர் செ.மோகன் குமார் குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இம்மண்ணில் படைப்புகளை அயலகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பரவலாக கொண்டுச் சேர்ப்பதில் தனித்துவ பங்களிப்பினை மேற்கொண்டு வருவதை மறுத்திட முடியாது.அவ்வகையில்,இலக்கியப் படைப்புகளுடன் எழுத்தாளர்களையும் இலக்கியவாதிகளையும் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்வதிலும் அவர்களுக்கு அம்மண்ணில் ஓர் அங்கீகாரம் கிடைப்பதற்கு சங்கமும் அதன் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனும் தீவிர முனைப்புக் காட்டி அதனை சாத்தியமாக்கியும் உள்ளனர் என்றார்.

சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணியத்தால் நம் நாட்டு இலக்கியங்கள் தமிழகத்தின் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் துணைப்பாடமாக ஏற்றுக்கொள்ளவும் பட்டிருப்பது மலேசிய எழுத்தாளர்களுக்கு தனித்துவ சிறப்பின் உச்சம் எனவும் சுட்டிக்காண்பித்த மோகன் குமார் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கவும் அஃது உற்சாகம் அளிப்பதாகவும் கூறினார்.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகமும் புரவலர் வழக்கறிஞர் மதியழகனும்

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இருவழி இலக்கியப் பயணத்தின் உறவுப்பாலமாக இருந்து வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு கிடைத்திருக்கும் தமிழ்த் தாய் விருது காலத்திற்கு ஒப்ப சிறந்த அங்கீகாரமாகும்.இவ்வாண்டு தமிழ்த் தாய் விருது கிடைத்திருக்கும் அதேவேளையில் கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் அச்சங்கத்தின் தலைவர் இராஜேந்திரனுக்கு சிறந்த இலக்கியச் சேவையாளர் விருதும் தமிழக அரசால் வழங்கப்பட்டிருப்பதை நினைவுக்கூறத்தான் வேண்டும் எனவும் மோகன் குமார் நினைவுக்கூர்ந்தார்.

அதேவேளையில்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு கிடைத்திருக்கும் இவ்விருதை அச்சங்கத்திற்கு கிடைத்த விருதா கருதாமல் இந்நாட்டின் இலக்கிய உலகிற்கும் இந்நாட்டின் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கிடைத்த விருதாகவும் எண்ணி நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.மேலும்,அவ்விருதை கொண்டாடும் விதமாகவும் கீர்த்திப் பாடும் விதமாகவும் இந்நாட்டிலுள்ள மாநில ரீதியிலான,மாவட்டம் ரீதியிலான மற்றும் வட்டார ரீதியிலான எழுத்தாளர் அமைப்புகளும் சங்கங்களும் மட்டுமின்றி ஒவ்வொரு எழுத்தாளனும் கொண்டாடி மகிழும் வகையில் நமது ஒவ்வொருவரின் நடவடிக்கையும், அமைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

முனைவர் செ. மோகன் குமார்

மேலும்,மலேசிய மண்ணிற்கும்,மலேசிய மண்ணின் தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெருமைச் சேர்த்திருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் பெ.இராஜேந்திரன் தலைமையிலான சங்கத்தின் நிர்வாகத்திற்கும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அதன் நிர்வாகமும் வாழ்த்தையும் புகழ்மாலையையும் சூட்டுவதாகவும் மோகன் குமார் தெரிவித்தார்.