சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஜெயலலிதா உடல்நிலை பற்றி நாங்கள் கூறியது எல்லாம் பொய்யே! அமைச்சர் தகவல்
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஜெயலலிதா உடல்நிலை பற்றி நாங்கள் கூறியது எல்லாம் பொய்யே! அமைச்சர் தகவல்

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்களை உடைக்கும் வகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றிரவு மதுரை பழங்காநத்தத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். புரட்சித்தலைவி அம்மா மரணம் அடைந்தபோது இரவோடு இரவாக புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு 33 ஆண்டுகள் அம்மாவுக்கு உதவி புரிந்ததாக கூறிய சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் சொன்னோம். அவரும் பொதுச்செயலாளர் ஆனார். நான் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டது உண்மை தான். மறுக்கவில்லை. அதன் பிறகு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. கட்சி விதிப்படி தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அசாதாரண சூழ்நிலையில் சசிகலா பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு சசிகலாவை முதல்-அமைச்சராகவும் தேர்வு செய்தோம்.

இந்த நேரத்தில் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை சசிகலா நியமித்தார். அப்போதெல்லாம் அவர்களுடன்தான் நாங்கள் இருந்தோம். அதை மறுக்கவில்லை. அன்றைய நிலை அப்படி. அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்க நேரிட்டது. தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி டீக்கடைகள் என்று பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அனைவருமே ஒரு கொலைகார குடும்பத்தில் ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைக்கிறீர்களே என்று பேசினர். புரட்சித்தலைவி என்ற அந்த தெய்வத்தை நோய்க்கு மருந்து கொடுக்காமல் கொண்டு போய் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம். ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்கவில்லை. இதுதான் உண்மை. அவர் பார்த்தார். இவர் பார்த்தார் என்று செய்தி சொல்வதெல்லாம் பொய். ஏன் என்று கேளுங்கள். அம்மா அப்பாவுக்குள் வீட்டில் சண்டை வரும். அக்கா-தங்கைகளுக்குள் சில நேரம் வீட்டில் சண்டை வரும். பல பிரச்சனைகள் வரும். பக்கத்து வீட்டுக்கு தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக பேசிக் கொள்வோம். அந்த மாதிரி இது நம்முடைய கட்சியின் ரகசியம். வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உண்மை.

அன்றைக்கு அப்படி பேசினீர்களே. இது வடிவேலு மாதிரி அது அந்த வாய், இது இந்த வாய் என்பது இல்லை. உண்மையை சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால் இது இன்றைய நிலை. அது அன்றைக்கு இருந்த சூழ்நிலை. இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல் நிலை பற்றி பொய் சொன்னோம். பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறார். எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா வருகிறார்கள். அதே போல் வெங்கையா நாயுடுவும் வருகிறார். எல்லோரும் வருகிறார்கள். எல்லோரும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து பிரதாப் ரெட்டி அறையில் அமர்கிறார்கள். நாங்கள் அவர்களை சுற்றி உட்கார்ந்து கொண்டு அம்மா நன்றாக இருக்கிறார்கள் என்கிறோம்.

ஆனால் ஜெயலலிதா இருந்த அறைக்கு சசிகலா மட்டும்தான் சென்று வந்தார். அவரது குடும்பத்தினரும் சென்று பார்த்து வருவார்கள். வேறு யாரும் பார்த்தது கிடையாது. வேறு யாராவது பார்த்தேன் என்று சொன்னால் கூட்டிட்டு வாங்க அவர்களை நாம் விசாரிக்கலாம். அதே போல் கவர்னர் மற்றும் ராகுல்காந்தி, தி.மு.க. செயல் தலைவர் என அனைத்து கட்சிக்காரர்களும் வந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மாடி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வணக்கம் சொல்லி அங்கே சேரில் உட்கார்ந்து விட்டு வந்து விட வேண்டியதுதான். ஏனென்று கேட்டால் நோய்த் தொற்று பரவி விடக்கூடாது என்பார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமி‌ஷன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு வீடியோவெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதை போட்டு காண்பியுங்கள். எல்லோருமே அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். இல்லையென்றால் பதில் சொல்ல வேண்டியவர்கள் டாக்டர்கள். உங்களுடன் உள்ளவர்கள். ஏன் இதை மறைக்க வேண்டும்.

எங்களது சந்தேகம் என்னவென்றால் அம்மாவை யாராவது பார்த்து விட்டால் என்ன நடத்திருக்கு, என்ன நடந்துகிட்டிருக்கு, எப்படி கொல்லப்படுகிறோம் என்ற செய்தியை சொல்லுவார்கள் என்று நினைத்துதான் யாருக்கும் காட்டாமல் வைத்திருந்தனர். இது எங்களது சந்தேகம். இதே சந்தேகம் சாதாரண எளிய தொண்டர்களுக்கும், சகோதரிகளுக்கும் வருகிறது. எங்களுக்கு வரக்கூடாதா? ஏன் காட்டவில்லை. நர்சுகள் போய் பார்க்கிறார்கள். டாக்டர்கள் போய் பார்க்கிறார்கள். வார்டு பாய் போய் பார்க்கிறான். உண்மையிலேயே அம்மா சிகிச்சை பெற்று இறக்கிறார் என்றால் அவரை ஏன் யாரையும் பார்க்கவிடவில்லை. அம்மா இறந்ததற்கு பிறகு அம்மா இறந்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கேதான் நாங்களெல்லாம் இருக்கிறோம். கூட்டிட்டு போய் காட்டவில்லை. இறந்த பிறகு சாதாரண வார்டு பாய் 5 பேர் போய் எல்லாவற்றையும் காட்டி அதன் பிறகு சடங்குகளையெல்லாம் செய்கிறார்கள். 75 நாட்களுக்கு முன்பு காட்டியிருந்தால் எல்லா வி‌ஷயங்களையும் எல்லோரும் தெரிந்திருக்கலாம்.

இதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் சொன்னதை நாங்களும் அங்கீகரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமி‌ஷன் வைத்திருக்கிறார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது இப்போது தெரிகிறது. உண்மை அதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன