கோலாலம்பூர், மே 9-
15ஆவது பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங்கின் முடிவிற்குத் தாம் மதிப்பளிப்பதாக ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.
மார்ச் மாதம் ஜசெகவின் மத்திய செயற்குழு தேர்தலுக்கு முன்னதாக ஓங் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அந்தோணி லோக் கூறினார்.
”இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற போதே அவர் தமது முடிவை என்னிடம் தெரிவித்தார். அது குறித்து என்னிடம் கலந்தாலோசித்தார். நானும் அவரை தொடர்ந்து போட்டியிட வேண்டுமென்பதற்காக முயன்றேன்” என சிரம்பானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த கட்சித் தேர்தலில் அவர் மத்தியச் செயலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை அது பாதிக்காது என்றார் அவர்.

இன்று வெளியிட்ட அறிக்கையில் தாம் அரசியலிலிருந்து விலகவில்லை. ஆனால் தற்சமயம் ஓய்வெடுக்க விரும்புவதாக ஓங் கியான் மிங் கூறியிருந்தார். அதோடு ஜசெகவின் உச்சமன்றத் தேர்தலின் முடிவு தமது இந்த நடவடிக்கைக்குக் காரணமாக இருந்தாலும் அதுவே முதன்மையான காரணமல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே வரும் பொதுத் தேர்தலில் ஜசெகவின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உதவுவதாக ஓங் கியான் மிங் தம்மிடன் உறுதியளித்ததையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.
”ஓங் கியான் மிங் பலமான அரசியல்வாதி. பல துறைகளில் மிகச் சிறந்த அடைவு நிலையை அவர் பதிவு செய்துள்ளார். அவர் தொடர்ந்து அரசியலில் நிலைபெற வேண்டுமென்பதே எனது ஆசை. ஆனால் அவரும் அவரது மனைவியும் அரசியலிலிருந்து விலகி ஓய்வு பெற எண்ணம் கொண்டுள்ளார்கள்”. என அந்தோணி குறிப்பிட்டார். அவரது முடிவைக் கட்சி மதிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


