spot_img
11 C
London
spot_img
Home மலேசியா கல்வி தாய்மொழிக்கல்வி அனைத்து மாணவரின் உரிமை ; தமிழ் இலக்கியம் தடையின்றி கற்பிக்கப்பட வேண்டும்

தாய்மொழிக்கல்வி அனைத்து மாணவரின் உரிமை ; தமிழ் இலக்கியம் தடையின்றி கற்பிக்கப்பட வேண்டும்

மலேசியக் கல்வித் தலைமை இயக்குநருக்குக் கல்வித்துணையமைச்சர் டத்தோ டாக்டர் மா கடிதம்

அண்மைய காலமாகத் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருந்த இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கான இடம் குறித்து கல்வித்துணையமைச்சர் டத்தோ டாக்டர் மா ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் கல்விக்கொள்கையும் எல்லா மாணவர்களின் கல்விநலனையும் பேணுகின்றது.

மாணவர்கள் பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட பாடங்களை விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கற்பதற்கு முழுச்சுதந்திரம் உண்டு. துறை நிபுணத்துவமிக்க ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்துக்குச் சில முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருந்தாலும், அது எவ்வகையிலும் ஒரு மாணவனின் கல்விக் கற்கும் உரிமையைப் பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது.

அடியேன் தமிழ்மொழிக் கற்காதவனாக இருக்கலாம். ஆனால் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அறியாதவன் அல்ல. தாய்மொழியின் மீது பற்றும் குறிப்பாகத் தமிழ்மொழியின் மீது நேசமும் கொண்டவர்கள் என்னைச் சூழ்ந்தே இருக்கிறார்கள்.

தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி தொடர்பான விவகாரங்களை என் எனது சிறப்பதிகாரி திரு. சிவா அவர்களின் வாயிலாக நான் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றேன். அதுபோல் இடைநிலைப்பள்ளிகளில் நிலவி வரும் தமிழ் இலக்கியப்பாடம் தொடர்பான சர்ச்சைகள் திரு.சிவா அவர்களின் வாயிலாக என்னிடம் உடனடியாகக் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர் சம்பந்த பட்ட பள்ளி முதல்வர்களிடமே விளக்கங்கள் பெறப்பட்டன.

இவற்றோடு நின்று விடாமல் இம்மாதிரியான சிக்கல்கள் எதிர்காலத்தில் தலைத்தூக்காமல் இருக்க கல்வித் தலைமை இயக்குநருக்குத் தாம் அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் டத்தோ மா தெரிவித்தார். அதில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளை மேற்கோள் காட்டி தமிழ் இலக்கியம், பாடத்திட்டத்தில் தேர்வுப்பாடமாக இருப்பதையும் அதனைப் போதிக்க பள்ளி முதல்வர்கள் தடையாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

கற்றுக்கொள்ள மாணவர்களும் கற்றுத்தர ஆசியர்களும் தயாராக இருக்கும்போது மற்றத் தரப்புகள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற விவகாரங்கள் எழும்போது பெற்றோர்களும் பொதுமக்களும் அதனை தமது அலுவலகத்துக்கு முறையாகத் தெரிவிக்க முன் வரவேண்டும். தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளி சார்ந்த விவகாரங்களை விதிகளுக்கு உட்பட்டு இயன்றவரைத் தீர்க்க தாமும் தமது அதிகாரிகளும் எப்போதும் தயாராக இருப்பதாக டத்தோ மா உறுதிபட தெரிவித்தார். அரசாங்கமும் கல்வி அமைச்சும் அனைவருக்கும் பொதுவானது. கல்வியில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்பதை அனைவரைப் போலவும் தாமும் பெரிதும் நம்புவதாகத் தெரிவித்தார்.