உலு சிலாங்கூர், மே 30-

பிகேஆர் உலு சிலாங்கூர் தொகுதித் தலைவராக டாக்டர் சத்திய பிரகாஷ் வெற்றி பெற்றார். அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ஜூன் லியூ சியாட் ஹுயை 100 வாக்குகள் பெரும்பான்மையில் டாக்டர் சத்திய பிரகாஷ் தோற்கடித்தார்.

பிகேஆர் கட்சியின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து உழைத்து வரும் சத்திய பிரகாஷ் உலு சிலாங்கூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அதோடு அப்பகுதியில் எஸ்பி கேர் கிளினிக்கை நடத்தி வருவதோடு மக்களுக்கு அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வருபவர்.

பிகேஆர் கட்சியின் முதன்மைத் தலைவர்களின் ஒருவரான ஜூன் லியூவை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். குறிப்பாக வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சார்பாக இத்தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளராகவும் டாக்டர் சத்திய பிரகாஷ் திகழ்கின்றார்.

உலு சிலாங்கூர் பகுதியில் வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்திடமும் அன்பாகப் பழக்கக்கூடிய டாக்டர் சத்திய பிரகாஷ், ஊடகவியலாளர்களுடனான நட்பை அணுக்கமாகப் பேணிவருகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலு சிலாங்கூர் தொகுதித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டாக்டர் சத்திய பிரகாஷ் 1903 வாக்குகள் பெற்றார். ஜூனுக்கு 1803 வாக்குகள் கிடைத்தன. அஸிசான் ஸாகரியாவிற்கு 161 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சைபுடின் ஷாபி முகமட்டிற்கு 1851 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராட்ஸாலி மொக்தாருக்கு 1617 வாக்குகள் கிடைத்தன. உதவித் தலைவருக்கான தேர்தலில் ராஜன் வெற்றி பெற்றார். அவருக்கு 1695 வாக்குகள் கிடைத்த நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகுமாருக்கு 1675 வாக்குகள் கிடைத்தன.