Homeகலை உலகம்3 கேள்விகளுக்கு 4 மணி நேரம்! ஊடகவியலாளர்களை மதிக்கத் தெரியுமா? ரசிகர்களின் மதிப்பு புரியுமா?

3 கேள்விகளுக்கு 4 மணி நேரம்! ஊடகவியலாளர்களை மதிக்கத் தெரியுமா? ரசிகர்களின் மதிப்பு புரியுமா?

விக்ரம் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று காலை மலேசியாவிற்கு வந்தார். மதியம் 2 மணிக்குக் கோலாலம்பூர் என் யூ செண்ட்ரலில் செய்தியாளர்கள் சந்திப்பு மத்தியில் ரசிகர்களைச் சந்திக்கின்றார் என்ற அறிவிப்பு தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவியது.

கமல்ஹாசனைக் காண வேண்டுமென அவரது ரசிகர்கள் காலை முதலே என் யூ செண்ட்ரலில் குவியத் தொடங்கினார்கள். குறிப்பாக மதியம் 2 மணிக்கு என் யூ செண்ட்ரல் முழுமையுமாக கமல்ஹாசன் ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர்.

இதற்கிடையில் மதியம் 2 மணிக்குச் செய்தியாளர்கள் சந்திப்பு இடம்பெறுமென்பதால், ஊடகவியலாளர்கள் தங்களின் வருகையை உறுதி செய்யச் சென்றிருந்தனர். அங்குதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பலருக்கு உட்காரக்கூட இடமில்லை (பின் குறிப்பு : நேற்று உலக ஊடகவியலாளர்கள் நாள்) இதில் சில முதன்மையான ஊடகங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் விடுத்த கேள்வி? “உங்களை யார் அழைத்தது?”

ஊடகவியலாளர்களை மதிக்கத் தெரியாத ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களை எப்படி மதிப்பார்கள். காத்துக் கிடைத்த ரசிகர்களுக்குப் பல மணி நேரம் கிடைத்து தரிசனம் கிடைத்தது. 6 மணியளவில் கமல்ஹாசன் ரசிகர்களைக் காண வந்தார்.

முன்னதாக அவரை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பு வேறு நடந்தது. இதை அறிந்திருந்த ஏற்பாட்டுக்குழு ஏன் ரசிகர்களைக் காக்க வைக்க வேண்டும். 60 வயதைக் கடந்த ரசிகர்களும் கமலின் வருகைக்காக இறுதிவரை காத்திருந்தார்கள். அவர்களின் உணர்வை கொஞ்சம் கூடவா நீங்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களை போல நீங்கள் ஆயிரங்கணக்கான மக்களுடன் காத்திருந்தால் அந்த உணர்வு புரிந்திருக்கும்.

வந்தார். பேசினார். 3 கேள்விகளுக்குப் பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பு முடிந்தது. நானும் கேள்வி கேட்க வேண்டுமென சில ஊடகவியலாளர்கள் குரல் எழுப்பிய போதும் ஏற்பாட்டுக்குழு அவர்களை மதிக்கவில்லை. 3 கேள்விகளுக்கு மட்டுமே வாய்ப்பு என்றும் கூறிவிட்டார்கள். பிறகு எதற்குச் செய்தியாளர் சந்திப்பு என ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்.

இதே நிலை சென்னையில் நிகழ்ந்திருந்தால், என்ன நடந்திருக்கும். இத்திரைப்படத்தை எப்படி விளம்பரம் செய்திருப்பீர்கள். இங்குள்ளவர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு ஏளனமாகப் போய்விட்டது. முதன்மை தனியார் தொலைக்காட்சிக்கு மட்டுமே வாய்ப்பு என்றால் மற்றவர்களை எதற்காக அழைத்தீர்கள். இதில் அரசியல் தலைவரின் சந்திப்பு வேறு.

ஒரு நிகழ்ச்சியைத் திறம்பட ஏற்பாடு செய்யத் தெரியவில்லை என்றால், ஒதுங்கியிருப்பதே சிறந்தது. அதைவிடுத்து ஊடகவியாளர்களை உங்கள் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தாதீர்கள்.

சமுக வலைத்தளங்களில் வரும் காணொலிகளைப் பார்த்து மிகச் சிறந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவிட்டதாகப் பலர் நினைக்கின்றார்கள். நேரில் சென்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கமல்ஹாசன் பேசும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்ய வேண்டுமென்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய நாடகம் இதுதான் என உங்களுக்குத் தெரியும்.

spot_img

latest articles

explore more