அம்பாங், ஜூன் 7-

15ஆவது பொதுத் தேர்தலில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பது இப்போது எளிதானது என அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமருடின் கூறியுள்ளார்.

பெர்சத்து கட்சியிலிருந்து விலகி தற்போது பங்சா மலேசியா கட்சியில் (PBM)இணைந்துள்ள அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

“Insya-Allah.. ஏனென்றால் நான் புதிய கட்சியில் சேர்ந்துள்ளேன், அதனால் முடிவெடுப்பது எளிது” என்று சிரித்தபடி செய்தியாளர்களிடம் கூறினார்.”

கோலாலம்பூரில் நடந்த மலேசிய ரப்பர் பேரவையின் ரப்பர் புத்தாக்கத்திற்கான உலகளாவிய நிதியத்தைத் தொடக்கி வைத்த பின்னர் தோட்டத் தொழில்துறை, மூலப்பொருள் அமைச்சருமான அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

2008ஆம் ஆண்டு பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு இதுவரையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சத்து கட்சியில் இணைந்தார்.

அவர் PBM கட்சியில் இணையக்கூடுமென பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் மே 26ஆம் தேதி அவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

PBM கட்சி ஜோகூர் மாநிலத் தேர்தலில் முதல் முதலாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வைப்புத் தொகையை (Deposit) இழந்தது.

இதற்கிடையில், புதிய கட்சியில் அவர் வகிக்கும் பதவி குறித்து ஸுரைடா தெளிவாகப் பதிலளிக்கவில்லை, மேலும் கட்சியில் சேருவதற்கான அவரது விண்ணப்பம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.

தாம் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரிதான் முடிவு செய்வார் எனவும் கூறியிருந்தார். இதனிடையே இவ்வாரம் தாம் பிரதமரைச் சந்திக்கவிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.