ஜொகூர் பாரு, ஜூன் 14-

வெள்ளி, சனிக்கிழமைகளில் வரும் ஓய்வுநாளை மறு ஆய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு பரிசீலித்து வருவதாக ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி கூறியுள்ளார்.

அரசு விடுமுறை நாட்களுடன் தனியார் நிறுவனங்கள் வழங்கும் விடுமுறை நாட்களும் வேறுபடுவதால் ஏற்படும் இன்னல்கள் குறித்த மக்களின் ஆதங்கங்களைக் கேட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“மாநில அரசு இந்த விவகாரத்தை மறு ஆய்வு செய்யும், இதனால் பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளும் ஒரே நாட்களில் ஓய்வெடுக்க முடியும்.

“இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சரியான நடவடிக்கையைக் கண்டறிந்த பிறகு, இதற்கான தீர்வை விரைவில் அறிவிப்பேன்” என்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

2013 ஆம் ஆண்டில், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலத்தின் ஓய்வு நாட்களைச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக வெள்ளி மற்றும் சனிக்கிழமையாக மாற்றுவதாக அறிவித்தார்.

பின்னர் ஜனவரி 1, 2014 முதல் மாநிலத்தில் வார இறுதி விடுமுறை மாற்றம் பின்பற்றப்பட்டது. ஜோகூர் தவிர, கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களும் வெள்ளி, சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாகக் கொண்டுள்ளன.