கோலாலம்பூர், ஜூன் 16-

சாலை சந்திப்புகள் அருகே மரங்கள் மற்றும் பூச்செடிகள் நடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை எதிர் திசையில் வாகனங்கள் வருகின்றனவா என்பதை வாகனமோட்டிகள் பார்க்க முடியாமல் செய்து விடுகின்றன. இதுவே சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன என்று மலேசிய இந்தியர் ஒற்றுமை கழகத்தின் (ஓமியா) தோற்றுனர் டாக்டர் நெல்சன் முருகன் தெரிவித்தார்.

சாலை சந்திப்புக்கு சுமார் 200 அடி தூரத்திற்கு முன்பு மரங்கள், செடிகள் அல்லது பூச்சாடிகளையோ வைக்கக் கூடாது. மரக்கிளைகள் மற்றும் பூச்சாடிகள் சாலைகளை மறைத்துவிடுவதால் சாலை திசை காட்டி பலகைகள் எதிர் திசையில் வரும் வாகனமோட்டிகளுக்கு தென்படுவதில்லை..

சாலையில் வலது அல்லது இடது புறமோ திரும்புவதற்கான சாலையைப் பார்க்க முடிவதில்லை. அதனை மரக் கிளைகள் மற்றும் பூச்சாடிகள் மறைத்து விடுகின்றன. சாலைகளில் விபத்துகள் மற்றும் அவற்றால் அதிகமானோர் மரணமடைவதற்கு இவை வித்திடுகின்றன என்றார் டாக்டர் நெல்சன். இவ்விவகாரத்தை எல்லா நகராண்மைக் கழகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றால் சாலைகளில் பேராபத்துகள் அதிகளவில் நிகழலாம் என்றார்.

அதே வேளையில், இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நடவடிக்கையில் போக்குவரத்து அமைச்சும் பொதுப் பணி இலாகாவும் உடனடியாக ஈடுபட வேண்டும். விபத்துகள் நடந்த பின்னர் பிரச்னை என்ன என்பதைக் கண்டறிவதை விடுத்து அதனை முன்கூட்டியே அறிந்து தீர்வு காண வேண்டும். பல உயிரிழப்புகள் ஏற்படுவதை இதன் மூலம் தடுக்கலாம் என்றார் அவர்.

அடுத்து, இரவு நேரங்களில் மின் விளக்குகள் சரியாக இயங்குவதில்லை. குறிப்பாக கூட்டரசு நெடுஞ்சாலைகளில் கோலாலம்பூர் தொடங்கி கிள்ளான் வரை ஏறக்குறைய 1,000திற்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. இது பொதுவாக நடந்து கொண்டிருக்கிறது.இதற்கான குத்தகையாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை. இதனைக் கண்காணிப்பவர்களும் எவரும் இல்லை.

அதே சமயம், வடக்கு- தெற்கு நெடுஞ்சாலைகளில் மழைக் காலங்களில் குழிகள் இருப்பது தெரிவதில்லை. அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் குழிகளில் விழுந்து ஆபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதோடு, சாலைகளில் நீர் தேங்கிக் கிடப்பதும் ஆபத்தாகும்.

எல்லா வாகனங்களும் கனரக வாகனம் கிடையாது. சாதாரண வாகனங்களே. பல விபத்துகள் நடப்பதற்கு சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே மூல காரணம். பல உயிரிழப்புகளுக்கு மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன.

இதன் பொருட்டு, இந்த விவகாரத்தை நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமும் போக்குவரத்து அமைச்சும் உடனடியாகக் கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனீட்டாளரின் நலனையும் இத்தரப்பினர் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் நெல்சன் வலியுறுத்தினார்.

“ நாம் ஏன் சாலை வரியைச் செலுத்துகிறோம். அரசாங்கத்திற்குச் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பதற்காகவே அவற்றிக்கு நாம் வரி செலுத்துகிறோம்.

இந்த நெடுஞ்சாலைகளால் வறியவர்களுக்குத்தான் பெரும் சிரமம்.குறிப்பாக, பழைய கிள்ளான் சாலையில் அமைந்துள்ள டோல் சாவடி உடனடியாக அகற்றப்பட வேண்டும். காரணம் அங்குள்ள மக்கள் யாவரும் வறியவர்கள். அங்கு டோல் போட்டு அங்குள்ள மக்களைச் சுற்றி வரச் செய்வது தற்போதைய பெட்ரோல் விலை ஏற்றத்தில் ஏற்புடையதா? ” என்றும் அவர் வினவுகிறார்.

போக்குவரத்து அமைச்சர் மழைக் காலங்களில் வீட்டில் இருக்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களைக் கண்டறிய வேண்டும்.மழைக் காலங்களில் பொது மக்கள் அனுப்பும் புகைப்படங்களை வைத்து நிலவரங்களைத் தெரிந்து கொள்வதை விடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் செல்லும்படி பொதுப்பணி இலாகா மற்றும் சாலை நிர்மாணிப்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்ட அவர் சாலைகளை நிர்மாணிப்பது மட்டுமே தங்கள் கடமை என்று இத்தரப்பினர் இருந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.