களும்பாங், ஜூன் 28-
14வது பொதுத் தேர்தலின்போது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துன் மகாதீர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை.
நான் அவரைப் போல் அல்ல. வாக்கு கொடுத்தால் அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன் என மலேசியாவில் ஆறாவது பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தெரிவித்தார். மை ஸ்கீல் அறவாரியத்திற்கு அதிகாரப்பூர்வமாக வருகைபுரிந்த அவர் இவ்வாறு தெரிவித்தார்
தாம் துணைப் பிரதமராக இருந்தபோது உயர்கல்வியில் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியர்களுக்காகப் பிரதமர் துறையின் கீழ் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப்பிரிவு தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு சரிந்ததற்கு துன் மகாதீர் கொண்டு வந்த அடைவு நிலை செயலாக்கம் (Merit system) தான் காரணம்.
இதனைக் கவனத்தில் கொண்டு உயர்கல்வியில் இந்திய மாணவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 1500 இடங்களை வழங்கியதாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 2100 ஆக அதிகரித்தது என்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.

அப்போதுதான் கல்வியின் பின் தங்கிய மாணவர்களின் எதிர்காலத்திற்கும் வழிவகை செய்ய வேண்டுமென முடிவு செய்து, மை ஸ்கில் அறவாரியத்திற்கு 10 மில்லியன் மானியம் வழங்கியதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.
பசுபதி தலைமையின் கீழ் செயல்படும் மை ஸ்கில் அறவாரியம் இதுவரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை நல்வழிப் படுத்தியதைக் கண்டு தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களின் தொடர் நடவடிக்கைக்குத் தாம் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மை ஸ்கில் அறவாரியம் இன்று சிறந்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு மை ஸ்கில் அறவாரியத்தின் தலைவர் பசுபதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


