உலு சிலாங்கூர், ஜூலை 19-
சுலு சுல்தான்களின் வாரிசுகளின் உரிமைகோரல்களை முன்னிறுத்தி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது அலட்சிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் 43 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பிற்கு எதிராக விசாரணை அறிக்கை முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக இந்த புகார் அளிக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் பிகேஆர் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
“2013 இல் சுலு சுல்தான்களின் வாரிசுகளுக்கு ஆண்டு கட்டணத்தை நிறுத்த நஜிப் நிர்வாகம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த புகார் செய்யப்பட்டுள்ளது”
“அவர் (நஜிப்) பிரதமராகத் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டவில்லை என்றால், பணம் செலுத்துவது நிறுத்தப்பட்ட பிறகு, பின் தொடர்ந்து வந்த சட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்”. என உலு சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்த பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
நஜிப்பின் முடிவு மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகச் சர்வதேச அளவில் வழக்குத் தொடுத்த சுலு சுல்தான்களின் வாரிசுகளிடமிருந்து எதிர்வினையைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து தரப்பினர்களும் தங்களது கருத்தை முன்வைக்க முன்வர வேண்டும். குறிப்பாக மக்களின் கருத்து மிக முக்கியமென சத்திய பிரகாஷ் சுட்டிக் காட்டினார். அதோடு போலீஸ் துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
டாக்டர் சத்திய பிரகாஷ் போல பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி, துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோரும் செத்தியா வங்சா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பில் புகார் அளித்துள்ளார்கள்.


