ஷா ஆலாம், ஜூலை 30-

     நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தனது கட்சி  மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும்  ஒரு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் என்று மலேசிய இந்திய நீதி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சண்முகம் ராமையா அறிவித்தார்.

      மலேசிய இந்திய நீதி காங்கிரஸ் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரு கட்சி.  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டும் .இந்நோக்கத்திற்காக சிலாங்கூரில் கோத்தா ராஜா, கிள்ளான்  மற்றும் ,கூட்டரசு பிரதேசத்தில் பத்து ஆகிய  3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பேராவில் பெஹ்ரான் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட கட்சி விருப்பம் கொண்டிருப்பதாக சண்முகம் தெரிவித்தார்.

      மலேசிய இந்திய நீதி காங்கிரஸ் கட்சியின் இந்த விருப்பத்திற்கு தேசிய முன்னணி தலைமைத்துவம் வாய்மொழி ரீதியாக ஒப்புதல் அளித்திருப்பதாக இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

     தற்போது இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு  போன்ற பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு காண அரசாங்க துறைகளில்  இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் தாங்கள் பேச்சு நடத்தியதாகவும் அதன் அங்கீகார கடிதத்திற்காக தற்போது காத்திருப்பதாகவும் சண்முகம் சொன்னார்.

நாடு முழுமையும் சுமார் 20,000 உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி இளைஞர், மகளிர் அணியினர் மற்றும் உறுப்பினர்களின் பேராதரவு வழி  சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தேசிய முன்னணி ஆதரவு கட்சியான இதன் நடவடிக்கைகள் மீது ஆர்வம் கொண்ட பலர் தற்போது  இதில் இணையத் தொடங்கியுள்ளனர்.

  நேற்று  ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர்  இக்கட்சியில் இணைந்தனர். இதற்கான பாரங்கள் இச்செய்தியாளர்கள் கூட்டத்தின்போது கட்சித் தலைவரிடம் நேரடியாக  ஒப்படைக்கப்பட்டன.