பெட்டாலிங் ஜெயா, ஆக. 1-
சுதந்திர மாதத்தில் தங்களின்  வாகனங்கள், வீடுகள் மற்றும் பணியிடங்களில் தேசிய கொடிகளைப் பறக்கவிடுவதன் வழி இந்நாட்டு  மக்கள் தங்களின் நாட்டுப் பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக சிந்தனை மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ   ரமேஷ் ராவ் கேட்டுக் கொண்டார்.

அக்காலம் போல் அல்லாது தற்போது மக்கள் குறிப்பாக இளைஞர்களிடையே தேசப்பற்று குறைந்து வருகிறது. இம்மாதம் கொண்டாடப்படும் 65 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடிகளைப் பறக்கவிடுவது அனைவரிடத்திலும் தேசப்பற்றை அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர்.

இம்மாதத்தில் கடை வீதிகள்  மற்றும் வீடுகள்   தேசிய கொடிகள் இன்றி வெறிச்சோடி  இருக்கக் கூடாது. அவை தேசிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள டிஜிட்டல் பேரங்காடியில் தேசிய கொடியைப் பறக்கவிடும் இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

“வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிடுவது நமது நாட்டின் மீது நாம் கொண்ட விசுவாசத்தைப் பறைசாற்றும். இது மற்ற வாகனமோட்டிகளை ஊக்குவிப்பதோடு சுதந்திர மாதத்தில் தேசிய கொடிகளைப் பறக்கவிடுவது மீதான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்” என்று அவர் சொன்னார்.


ஆர்எஸ் பார்க் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சமூக சிந்தனை மேம்பாட்டு இயக்கம் மேற்கொண்ட இவ்வியக்கத்தில் ரமேஷ் ராவ்வும் இதர பொறுப்பாளர்களும் 300 தேசிய கொடிகளை வாகனமோட்டிகளுக்கு விநியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் பார்க் நிறுவனத்தின் நிர்வாகி ஷாபிக், வர்த்தக மேம்பாட்டு பிரிவு அதிகாரி விஜய் குமார், ஸ்மார்ட் நிறுவன நிர்வாக தலைவர் டத்தோ சிவா, இக்லாஸ் தலைவர் டத்தோ ரிடுவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.