கோலாலம்பூர், செப். 24-
திரைப்பட துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இயக்கிய குறும்படங்களை வெளியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது வடை புரடக்க்ஷன் நிறுவனம்.
இத்துறையில் மிளிர வேண்டும் என்ற லட்சியமும் ஆர்வமும் கொண்டவர்களுக்காக வடை புரடக்க்ஷன் நிறுவனம் குறும்பட தயாரிப்பு பயிற்சி பட்டறையை நடத்தியது. இதில் 60 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் இறுதியில் தங்களின் குறும்படத்திற்கான கதைச் சுருக்கத்தை எழுதும்படி பயிற்சியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிறந்தவையாக நால்வரின் கதைச் சுருக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஆற்றல்மிக்க அந்த நான்கு இளம் படைப்பாளர்களுக்கும் வடை புரடக்க்ஷன் நிறுவனம் குறும்படத்தை இயக்குவது மற்றும் படைப்பாற்றல் குறித்து முறையான பயிற்சி அளித்தது. அதோடு, இவர்கள் தங்களின் முதல் குறும்படத்தைத் தயாரிக்கவும் ஊக்குவித்ததாக இந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி கே. கவிநந்தன் தெரிவித்தார்.
நந்தினி சம்பந்தனின் ‘தெரப்பி செஷன்’, சிவா கோவிந்தனின் ‘செய்ன் ஆஃப் எஙகர்’, ஹேமா நந்தினியின் ‘மிருத்யுன்ஜெய்’ மற்றும் விஷ்மனின் ‘ ஒரு நண்பன் இருந்தால்’ ஆகிய குறும்படங்களே இந்த இளம் இயக்குநர்களின் கன்னி முயற்சியாகும்.
இந்தக் குறும்படங்களில் நடித்தவர்களும் இத்துறைக்குப் புதியவர்களே. ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட இளைஞர்களின் அனைத்து வகை கலைத் திறன்களை அடையாளம் காணும் ‘வேட் எ டேலண்ட்’ நிகழ்ச்சி வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இவர்கள் என்று இங்குள்ள ஃபினாஸ் அரங்கில் நடைபெற்ற ‘காட்சி’ திட்டத்தின் குறும்படங்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் கவிநந்தன் விவரித்தார் .
இதனிடையே, திரைப்பட துறையில் ஈடுபட்டிருப்போர் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ‘காட்சி’ திட்டத்தின் குறும்படங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் மஇகா உதவித் தலைவர் டத்தோ ஏ. கோகிலன் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், உள்நாட்டு திரைப்படங்கள் வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தப்பட வேண்டும். இதன் வழி உள்நாட்டு கலைஞர்களின் திறமை வெளி உலகுக்கு எட்டும் என்றார்.
‘காட்சி’ திட்டத்தின் குறும்படங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவற்றின் திரைக் காட்சிகள் வருகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டதோடு அவற்றின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் அறிமுக அங்கமும் இடம் பெற்றது.
கவிநந்தன் இயக்கத்திலான ‘தீதும் நன்றும்’ எனும் தலைப்பிலான குறும்படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளுடன் நிகழ்ச்சி ஒரு நிறைவை நாடியது.

