கோலாலம்பூர், செப்.24-
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தனது இசை மழையால் மலேசிய மக்களை நனைய வைக்க வருகிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
வரும் ஜனவரி 28 ஆம் தேதி தலைநகர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் பல புகழ்ப் பெற்ற தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர்களும் பங்கேற்பர் என்று டிஎம்ஒய் கிரியேஷன் நிறுவனத்தின் தோற்றுனர் டத்தோ முகமது யூசோப் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டு இசைத்துறை பயணத்தைக் கொண்டாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியை டத்தோ முகமது யூசோப் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து அறிமுகம் செய்தது முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்தது.
இதற்காக இவரின் பெயர் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இச்சாதனைக்கான சான்றிதழ் இங்கு நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சிக்ரட் ஆஃப் சக்சஸ் இசை நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
“மலேசியாவை இசை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்தும் அதே வேளையில் கோவிட் 19- பெருந்தொற்றுக்குப் பின்னர் நாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்க அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகை புரிவதை ஊக்குவிக்கும். மலேசிய சுற்றுலா தொழிற்துறையின் மேன்மைக்கு இது தூண்டுகோளாக அமையும்” என்றார் அவர்.
“ மலேசியா, இந்தியா,சிங்கப்பூர், துபாய்,வியட்னாம், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, சவூதி அரேபியா உட்பட 14 நாடுகளில் இந்த இசை நிகழ்ச்சி குறித்து வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தப்படும் “ என்று ஏ.ஆர்.ரஹ்மான் சிக்ரட் ஆஃப் சக்சஸ் இசை நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கோலாலம்பூரில் நடைபெறும்
இந்நிகழ்ச்சி துபாயில் உலகின் மிக உயரமான கோபுரமான பூர்ஜ் கலிபாவில் எல்இடி திரையில் 3 நிமிடங்களுக்கு நேரடி ஒளிபரப்பப்படும்.
மலேசிய சுற்றுலா மற்றும் 2023 மலேசியாவிற்கு வருகை புரியும் சின்னங்களைத் தாங்கிய இந்த விளம்பரம் அனைத்துலக ரீதியில் மலேசியாவைப் பிரபலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வித்தியாசமான மேடை அலங்காரம், நவீன ஒலி, ஒளி அமைப்பு, நிகழ்ச்சிக்கு முன்பும் பின்னரும் ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றோடு பல துறைகளில் வேலை மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொண்டாட்ட நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கும் என்று அவர் மேலும் விவரித்தார்.
சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளின் விலை வெ.688, வெ.388,வெ.288 மற்றும் வெ.88 ஆகும்.
டிக்கெட்டுகளுக்கு www.ticket2u.com.my எனும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு மைடீனுடன் 03-61777427 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

