கோலாலம்பூர், செப். 29-
உண்மையிலேயே வேலை செய்ய இயலாதவர்களுக்கு
சொக்சோ ஓய்வூதிய தொகை கிடைக்கும் வகையில் இவ்விவகாரத்தை அமைச்சரவைக்குத் தாம் கொண்டு செல்லவிருப்பதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கடும் நோய் மற்றும் விபத்து காரணமாக வேலை செய்ய முடியாமல் இருப்போருக்கு சொக்சோ ஓய்வூதிய தொகை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்றார் சரவணன்.

“பலர் உண்மையிலேயே வேலை செய்ய முடியாத அளவுக்கு நோயால் அவதியுற்று வருவதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் சொக்சோ ஓய்வூதிய தொகையைப் பெறத் தகுதி உடையவர்கள்” என்று இங்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற மனித வள அமைச்சின் பொது மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

பல்வேறு பிரச்சினைகளுக்காக நாடு முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சி வழி தம்மைச் சந்தித்ததாகவும் இவர்களில் பெரும்பாலோர் சொக்சோ நிறுவன மருத்துவ குழுவால் ஓய்வூதிய தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் என்றார் அவர்.

“நோய் காரணமாக உண்மையிலேயே வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் இவர்கள் உள்ளனர். ஆனால், சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட மருத்துவ குழு சொக்சோ ஓய்வூதிய தொகையைப் பெற இவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இது உண்மையில் வருத்தமளிக்கக்கூடிய ஒரு விவகாரமாகும்.ஒரு தொழிலாளியால் வேலை செய்ய முடியுமா, இல்லையா என்பதை சுகாதார அமைச்சுதான் முடிவு செய்யும். ஆகையால், இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சிடமும் தாம் பேச்சு நடத்தவிருப்பதாக மஇகா தேசிய துணைத் தலைவருமான அவர் விவரித்தார்.