கோலாலம்பூர், அக். 6-
அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சொக்சோ ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படும் என்று மனித வள அமைச்சர்
டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இதன் வழி தற்போது இந்த ஓய்வூதிய தொகையைப் பெற்று வரும் 4 லட்சத்து 56ஆயிரம் பேர் பயனடைவர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) 11ஆவது ஆய்வின் அடிப்படையில் சொக்சோ ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படுவதாக இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியினூடே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் சமூக, பொருளாதார நிலை, வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு, பண வீக்கம் போன்ற விவகாரங்களைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விவரித்தார்.
இதன் அடிப்படையில் தற்போது மாதந்தோறும் 475 வெள்ளியைப் பெறுவர் அடுத்தாண்டு முதல் 550 வெள்ளியைப் பெறுவர். இது மொத்தம் 213 மில்லியன் வெள்ளியை உட்படுத்தும் என்பதை மஇகா தேசிய துணைத் தலைவருமான சரவணன் சுட்டிக் காட்டினார்.

