கோலாலம்பூர், அக்.11-
நாட்டில் சமூகம், கலை, வர்த்தகம், மருத்துவம், ஊடகவியல், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து அவர்கள் தத்தம் துறைகளில் தொடர்ந்து சீரிய பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிப்பதற்கான நம்பிக்கை குழுமத்தின் நட்சத்திர விருது விழா தலைநகர், உலக வாணிப மையத்தில் கோலாகலமாக நடந்தேறியது.
நம்பிக்கை குழுமத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அதன் நிறுவனர் டத்தோஸ்ரீ முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் நீதிபதிகள் தேர்வு, மக்கள் தேர்வு என இரு பிரிவுகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு பெற்றனர்.
இவ்விழாவை மனித வள அமைச்சரும் மஇகா தேசிய துணத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
நீதிபதிகள் தேர்வாக அமைந்த விருதுகள் பட்டியலில் சிறந்த நாளிதழ் கட்டுரையாளர் விருதை மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தட்டிச் சென்றார்,
சிறந்த நிருபர் விருதை மலேசிய நண்பன் துணையாசிரியர் பார்த்திபன் நாகராஜன் வென்ற வேளையில் சிறந்த பத்திரிகை ஆசிரியராக மக்கள் ஓசை ஆசிரியர் எம்.எஸ்.மலையாண்டி தேர்வு பெற்றார்.
தொடர்ந்து, நீதிபதிகள் தேர்வு பட்டியலில் சிறந்த விளையாட்டு வீரராக எஸ்.சுரேஷும் மூத்த விளையாட்டு வீரராக மகாகுரு மகாலிங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டாக்டர் விஜய் ரெனா ராமலிங்கம் சிறந்த இளம் வர்த்தகர் விருதுக்குத் தேர்வு பெற்ற வேளையில் பாலதண்டாயுதம் சிறந்த வேளாண்மை வர்த்தகர் விருதைப் பெற்றார்.
டிரா மலேசியா சிறந்த சமூக இயக்கமாகவும் பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி சிறந்த முன்னோடி தமிழ்ப்பள்ளியாகவும் தேர்வு பெற்றன.
ஈரோடு மகேஸ் மற்றும் ரேவதி மாரியப்பனின் கலகலப்பான அறிவிப்பில் மலர்ந்த இந்த விருதளிப்பு விழாவில்
சிறந்த கல்வியாளராக டாக்டர் முகம்மது யூனோஸ் யாசின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் சிறந்த மருத்துவராக தலைநகரைச் சேர்ந்த டாக்டர் விக்னேஸ்வரன் முத்து தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சிறந்த வழக்கறிஞராக கோகிலவாணி வடிவேலும் சிறந்த காவல் துறை முன்னோடியாக டத்தோ சசிகலா சுப்ரமணியமும் நீதிபதிகள் குழுவால் தேர்வு பெற்றனர்.
நம்பிக்கை வாழ்நாள் சாதனையாளர் விருதான மலேசிய மாமனிதர் விருது அண்மையில் மறைந்த மஇகா முன்னாள் தேசிய தலைவர் துன் ச.சாமிவேலு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை துன் ச.சாமிவேலு அவர்களின் பாசறையில் வளர்ந்த டத்தோஸ்ரீ சரவணன் பெற்றுக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் இந்த விருது துன் சாமிவேலு அவர்களின் பெயரிலேயே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மக்கள் தேர்ந்தெடுத்த சாதனையாளர்கள் விருதுகள் வரிசையில் சமூக ஊடகம் சார்ந்த சிறந்த நகைச்சுவை விருதை ஜோக்கி கிங் வென்றார்.
புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளராக டி.எச்.ஆர்.ராகா உதயா தேர்வாகிய வேளையில் சிறந்த செய்தி வாசிப்பாளராக சூரியா சம்பத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் பட்டியலில் சிறந்த நடனக் கலைஞராக துர்காஷினி தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் சமூக ஊடகத்தில் சிறந்த வர்த்தகராக எங்க அம்மாயி, சிறந்த நடிகையாக பாசினி சிவக்குமார், சிறந்த நடிகராக இர்ஃபான், சிறந்த சிந்தனையாளராக டாக்டர் புனிதன் ஷான், சிறந்த இயக்குநராக ஜேகே விக்கி,, சிறந்த ஜோடியாக புடாக் மாமா, சமூக ஊடக உச்ச நட்சத்திரமாக டாக்டர் சந்திரா ராமன் ஆகியோர் தேர்வாயினர்.
சிறந்த படைப்பாக பூச்சாண்டிதேர்வு பெற்றது.
பிரமுகர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் என அரங்கம் நிறைந்த மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு கொண்டாட்டமாக அமைந்தது நம்பிக்கையின் நட்சத்திர விருதளிப்பு என்றால் மிகையாகா.

