Home சமூகம் பிஜே சிட்டி காற்பந்து குழு வீரர் ராஜேஸ் சாலை விபத்தில் அகால மரணம்

பிஜே சிட்டி காற்பந்து குழு வீரர் ராஜேஸ் சாலை விபத்தில் அகால மரணம்

331

கோலாலம்பூர், அக்.18-

பெட்டாலிங் ஜெயா சிட்டி (பிஜே சிட்டி) காற்பந்து குழு வீரர் ராஜேஸ் பெருமாள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமுற்றார்.

    பத்து மூடா அருகே நேற்று முன்தினம்  இரவு மணி 10.30 வாக்கில் நடந்த இந்த விபத்தில் ராஜேஸ் ஓட்டிச் சென்ற  மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பகுதியை மோதிய பின்னர் மரத்தில் மோதியிருக்கக்கூடும் என்று  கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர்  நோர் அரிஃபின் நாசீர் தெரிவித்தார்.

    தலையில் கடுமையான காயங்களுக்கு உள்ளான ராஜேஸ் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகக்  கூறப்பட்டது.

    இவர் பிஜே சிட்டி காற்பந்து குழுவின் அனுபவமிக்க விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தார். இவரின் மறைவு இக்குழுவுக்குப் பேரிழப்பாகும் என்று இதன் பயிற்சியாளர் பி.மணியம் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

    “கட்டொழுங்குமிக்கவரான ராஜேஸ் விளையாட்டில் முழு ஈடுபாடு கொண்டவர்.இக்குழு விளையாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்” என்றார் மணியம்.

    37 வயதான ராஜேஸ் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிஜே சிட்டி காற்பந்து குழுவில் இணைந்தார். இதற்கு முன்பு பிகேஎன்எஸ் எஃப்சி, சிலாங்கூர் மற்றும் கெடா ஆகிய குழுக்களுக்கு விளையாடியுள்ளார்.

    இவருக்கு  கோமதி என்ற மனைவியும்  மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவரின் இறுதிச் சடங்கு பஞ்சாரா கோர்ட், பி -3-1 ஜாலான் சமுத்ரா உத்தாரா 1, தாமான் சமுத்ரா, பத்து கேவ்ஸ் எனும் முகவரியில் உள்ள இவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற பின்னர் நல்லுடல் பிற்பகல் 2,00 மணியளவில் கெப்போங் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

    ராஜேஸின் மறைவுக்கு அநேகன்  தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.