கோலாலம்பூர், நவ. 11-
1998 ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் முகமது பிரதமராக இருந்த சமயத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மறுமலர்ச்சி இயக்கம் தொடங்கப்பட்டவுடன் தியான் சுவாவும் அவரின் ஆதரவாளர்களும் அன்வார் இப்ராகிமிற்கு நீதி கோரி போராட்டத்தில் முழு மூச்சாய் ஈடுபடத் தொடங்கினர்.
தனது போராட்டத்தின் விளைவாக தியான் சுவா மக்கள் மத்தியில் “மறுமலர்ச்சி அலையை” ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு கெஅடிலான் நேஷனல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இதற்குப் பின்னணியில் இருந்தவர்களில் தியான் சுவாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் தியான் சுவா தேசிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சிரமங்கள், தடைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்நோக்கினார்.
வாகனத்தில் இருந்து ரசாயன நீர் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி காயமுற்றது மற்றும் அடி, உதைபட்டு சாலையில் தர தரவென இழுத்து வரப்பட்டு வாகனத்திற்குள் திணிக்கப்பட்டது போன்ற கசப்பான அனுபவங்களையும் கொண்டுள்ளார் தியான் சுவா.
தியான் சுவா “ரிஃபோர்மாசி” என்று உரக்கக் குரலில் உச்சரித்தபோது நீதி கோரியும் தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவரோடு சேர்ந்து மக்களும் இந்த வார்த்தையை உரக்கத்துடனும் உற்சாகத்துடனும் முழங்கி இவ்வியக்கத்திற்கு உயிரூட்டினர்.
மறுமலர்ச்சி போராட்டவாதியான இவர் பலமுறை நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கியுள்ளார். பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டும் உள்ளார். ஆகக் கடைசியாக, தியான் சுவா சிறையில் அடைக்கப்பட்டு 2 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீதி கோரி போராடுவதிலும் பல்வேறு வகையான தடைகளை எதிர்கொள்வதிலுமே இவர் செலவழித்தார்.
எது எவ்வாறாயினும், மக்களுக்காக நீதி கோரும் தனது போராட்டத்தை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் தியான் சுவா.
இவர் 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிவாக்கில் நடத்தப்பட்ட மறுமலர்ச்சி இயக்கத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் ஒருவரும் பிகேஆரின் தொடக்கக் கட்ட தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பத்து நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த தியான் சுவா 2010 ஆம் ஆண்டு தொடங்கி பிகேஆர் கட்சியின் உதவி தலைவராகப் பொறுப்பேற்றார்.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 12 ஆவது பொதுத் தேர்தலில் தியான் சுவா பத்து நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்டு வென்றார். கெராக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் சிம் பின்னை 9,455 வாக்குகள் பெரும்பான்மையில் இவர் தோற்கடித்தார்.
இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் மேலும் 4 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று 13,284 வாக்குகள் பெரும்பான்மையில் தியான் சுவா வெற்றி பெற்றார்.
14 ஆவது பொதுத் தேர்தலில் (2018) தியான் சுவா போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதைத் தொடர்ந்து இவர் அத்தேர்தலில் போட்டியிடவில்லை. தொடக்கத்தில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பின்னர் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிடலாம் என்று நினைத்தார்.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டியிடாவிட்டாலும் பிரபாகரனை மக்கள் பிரதிநிதியாகத் திகழச் செய்வதற்காகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.
தியான் சுவாவின் கடின முயற்சியின் பலனாக பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரபாகரன் 38,125 வாக்குகள் பெற்று வாகை சூடினார். இவரின் இந்த வெற்றிக்குப் பீன்னால் தியான் சுவாவின் மிகப் பெரிய பங்களிப்பு இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தியான் சுவா பத்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் பிபிஆர் வீடமைப்பு, பள்ளிவாசல், ஆலயம், கட்டமைப்பு, வெள்ளம், கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த விவாகாரங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்தார். இதற்கு ஊராட்சி மன்றம் (டிபிகேஎல்) மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் இவர் கொண்ட அணுக்கமான உறவு கைகொடுத்தது.பத்து தொகுதி மக்களிடையே இவர் தனி செல்வாக்குப் பெறுவதற்கு இவரின் இத்தகைய உண்மையான மற்றும் முழு ஈடுபாட்டுடன் கூடிய சேவையே காரணம்.
பத்து மக்களைப் பொறுத்தவரை தியான் சுவா சிறந்த தலைவராகவும் மறுமலர்ச்சி போராட்டவாதியாகவும் தென்படுகிறார்.
எனினும், 15ஆவது பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இத்தொகுதி மக்கள் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
ஆனால்,இத்தொகுதி வாக்காளர்கள் இந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவையை அறிந்து அதனை நினைவு கூர்ந்து வருகின்றனர். இவர்களின் வேண்டுகோள் மற்றும் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பத்து நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக “ நாற்காலி” சின்னத்தில் தான் போட்டியிடுவதாக வாக்குறுதி அளித்தார். இத்தேர்தலில் கட்சி இவருக்கு எந்தவொரு ஆதரவும் வழங்கவில்லை.
இத்தேர்தலில் பத்து தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தியான் சுவாவிற்கு ஆதரவு அளிக்கும்படி இங்குள்ள அவரின் ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன்
கெஅடிலான் ராக்யாட் கட்சி
1999 ஆம் ஆண்டு முதல் உறுப்பினர்


