கிள்ளான், நவ.11-  

கிள்ளானில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு மாற்று வழி தீர்வு காண்பதே மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  பின்னர் தனது முதன்மை நோக்கமாக இருக்கும் என்று வரும்  15ஆவது பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும்  தீபக் ஜெய்கிஹான் தெரிவித்தார்.    

    இங்கு வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கான மாற்று வழிகளை ஆராய்வதோடு 1,000 தொண்டூழியர்களோடு   கிள்ளான் வெள்ளப் பேரிடர் குழு ஒன்றையும் அமைக்கவிருப்பதாக அவர் கூறினார்.           வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தத்தம் பகுதியில் உள்ள ருக்குன் தெதாங்கா குடியிருப்பாளர் அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் நாடப்படும் என்று இங்குள்ள தாமான் பாயு பெர்டானாவில் தனது 7 அம்ச தேர்தல்  அறிக்கையை வெளியிட்டபோது விவரித்தார்.   

அதோடு, வெள்ளம் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டு தொகையை மாநில அரசாங்கம் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்றும் தீபக் சொன்னார்.     

அதே சமயம், பேறு குறைந்தோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கிள்ளானின் பாதுகாப்பு, கல்வி ஒதுக்கீடு, பாரம்பரிய இடங்களின் பெயர்களைத் தக்க வைத்துக் கொள்வது, கிள்ளான் வாழ் இளைஞர், மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு  ஊக்குவிப்பு நிதி போன்றவையும் “பெடுலி கிள்ளான்” எனும் கிள்ளான் மக்களுக்கு தான் ஆற்றத் திட்டமிட்டிருக்கும் சேவைகள் ஆகும் என்றார்.       

இவை யாவும் வரும் பொதுத் தேர்தலில் தீபக் ஜெய்கிஹான் வெற்றி பெற்றால் செய்யத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் ஆகும்.      

  ஒட்டுமொத்த மலேசியாவிற்கான மேலும் 7 அம்சங்களைக் கொண்ட  தேர்தல் அறிக்கையையும் இந்நிகழ்ச்சியில் அவர் வெளியிட்டார்.