செர்டாங், நவ.13-
பாங்கி வாழ் அனைத்து இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைந்து அவர்களுக்கு சுபிட்சமும் வளமும் நிறைந்த ஒரு வாழ்க்கை நிலையை ஏற்படுத்தித் தருவதே தனது முக்கிய இலக்கு என்கிறார் 15 ஆவது பொதுத் தேர்தலில் பாங்கி நாடாளுமன்ற தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஷரிஷான் ஜோஹான்.


இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் இத்தொகுதி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியுள்ளார். அவற்றைத் தாம் தொடர்வதோடு மேலும் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் ஷரிஷான் கூறினார்.


கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் மக்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியிருந்த சமயத்தில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியது பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கமே என்பதை இங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.


முன்பு செர்டாங் தொகுதியாக இருந்த இத்தொகுதி 2018 ஆம் ஆண்டு முதல் பாங்கி தொகுதியாக மாற்றம் கண்டது. ஏறத்தாழ 3 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் 11% அல்லது 30,000 பேர் இந்தியர்கள். அனைத்து சமூகத்தினரிடமிருந்தும் தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாவும் அவர் சொன்னார்.


நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் என ஒரு குழுவாக மக்களுக்கு இதுகாறும் தாங்கள் சேவையாற்றி வருவதாகவும் இவற்றில் குறைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டு சிறந்த சேவையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் விவரித்தார்.


“வெள்ளப் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அமலாக்க தரப்பினரின் ஒத்துழைப்போடு தீர்வு கண்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்களில் ஒன்றாகும்” என்று ஷரிஷான் மேலும் கூறினார்.


ஒரு வழக்கறிஞர் எனும் முறையில் சட்டப் பிரிவு மையம் ஒன்றை அமைத்து மக்களின் சட்டம் சார்ந்த விவகாரங்களைக் கையாள இலக்கு வகுத்திருப்பதாகவும் அவர் விவரித்தார்.
அதோடு, மனநல ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, மின்னியல் வர்த்தகம் போன்ற விவகாரங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேற்காணும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை தனக்கு அளிக்கும்படி பாங்கி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங், சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் மாஸ்வான் ஜோஹார், காஜாங் சட்டமன்ற உறுப்பினர் யீ லோய் சியான் , நகராண்மைக்கழக உறுப்பினர்கள் தியாகராஜன், பாலா மற்றும் சங்கீதா, கிராமத் தலைவர்கள் கிறிஸ்டி மற்றும் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.