கிள்ளான், நவ. 14-
    இங்குள்ள பண்டமாரான் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குப்பைகளால் அடைத்துக் கொண்டிருக்கும் கால்வாய் பிரச்சினையை இரு தினங்களில் தான் தீர்த்து வைக்கப் போவதாக
தீபக் ஜெய்கிஷான் கூறினார்.
       கடந்த இரண்டு வாரங்களாக இந்தக் குடியிருப்புப் பகுதியின் கால்வாய்கள் குப்பைக் கூளங்களால் நிரம்பி காணப்படுகின்றன. ஆனால், அமலாக்கத்  தரப்பினர்   யாரும் அவற்றைத் தூய்மைப்படுத்தவில்லை. இவற்றை தனது குழுவினர் இரண்டே தினங்களில் தூய்மைப்படுத்தவிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தீபக்  குறிப்பிட்டார்.
          அதே வேளையில் , இப்பகுதியில் கடந்த  ஒரு வாரமாக குப்பைகள் சேகரிக்கப்படவில்லை. 14 ஆண்டுகளாக நீர்த் தொட்டி மாற்றப்படாததால் சிறார்கள், முதியவர்கள் உட்பட இக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் துரு பிடித்த நீரை அருந்தி வருகின்றனர். இது சுகாதார கேட்டிற்கு விளைவிக்கும் என்று  அவர் சுட்டிக் காட்டினார்.

         “மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு நேரம் செலவழிக்க வேண்டிய மக்கள் பிரதிநிதியே நமக்கு வேண்டும். ஆகையால், மாநில அரசாங்கம் மாற்றம் காண வேண்டும்” என்று இங்கு மாநில அரசு கட்டடம் முன்பு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.

    
       கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் தீபக், பெரிக்காத்தான் நேஷனல் (பெர்சத்து) பி.ஜெய சந்திரன், தேசிய முன்னணி (மசீச)  தீ ஹூய் லிங், வாரிசான் லூ செங் வீ  , பிஆர் எம் எஸ்.சந்திர சேகர், பக்காத்தான் ஹராப்பான், (ஜசெக) கணபதி ராவ் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஹெட்ரின் ரம்லி @ அவின் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.