கோலாலம்பூர், நவ.18-
    நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்களை மறந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் எல்லா இந்திய வேட்பாளர்களுக்கும் நமது ஆதரவை வழங்கி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூட்டரசு பிரதேச முன்னாள் துணை அமைச்சர் டத்தோ லோக பால மோகன் அறைகூவல் விடுத்தார்.
    நமது தாய்க் கட்சியான ம.இ.கா இந்தியர்களின் உரிமைக்காகவும் அவர்களின் பிரச்சனைகளையும் களைந்து வந்துள்ளது எனவும் இந்த தேர்தல் காலத்தில் அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நமது காவலனாக அவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கைத் தமக்கு இருப்பதாகவும் டத்தோ லோக பாலா கூறினார்.
    ம.இ.கா. இதுவரை இந்தியர்களின் காவலனாக இருந்து வந்துள்ளது. இந்த அடிப்படையில் ம.இ.கா. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை நாம் உறுதிச் செய்ய வேண்டும். அதே வேளையில் எதிர்கட்சியில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக வேறு இனத்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் நாம் எதிர்கட்சியிலுள்ள இந்தியர்களுக்கு ஆதரவளித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் டத்தோ லோக பாலா கூறினார்.
    

நமது உரிமைகளை நிலைநாட்ட, பாதுகாக்க, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நமது தாய்க் கட்சி வேட்பாளர்களுடன் மற்ற கட்சிகளைச் சேர்ந்த இந்திய வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.