காஜாங், ஜன.18-
சிலாங்கூர், பெரானாங்கிலுள்ள ஒரு பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 109,000 பள்ளி உதவி நிதி கொள்ளையடிக்கப்பட்டதில் ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளானார்.
அந்த ஆசிரியரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பள்ளி உதவி நிதி கொள்ளையடிக்கப்பட்டதாக
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமட் ஸையிட் ஹாசான் தெரிவித்தார்.
அந்த தலைமை ஆசிரியர் பானம் வாங்கச் சென்றிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக முகமட் ஸையிட் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.17 மணிக்குத் தங்களுக்குத் கிடைத்த தகவலின்படி அந்த ஆசிரியர் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியை செமினி பட்டணத்திலுள்ள ஒரு வங்கியிலிருந்து மீட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் (50)கம்போங் பாரு செமினியிலுள்ள ஒரு வங்கிக்குத் தனி ஒருவராகச் சென்று 109,000 ரொக்கத்தை மீட்டுள்ளார்.
பணத்தை அவர் ஒரு பைக்குள் வைத்து அதை தொயோத்தா ரக வாகனத்தின் முன்பயண இருக்கையில் வைத்து விட்டு உணவகம் ஒன்றிற்கு பானம் வாங்கச் சென்றார்.
காருக்குத் திரும்பி 10 நிமிடம் கழித்து வந்து பார்க்கையில் தமது காரின் வலது பயணி இருக்கையின் கண்ணாடி உடைக்கப்பட்டு ரொக்கம் இருந்த பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் சம்பந்தப்பட்ட சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடி வருவதாக முகமட் ஸையிட் ஹாசான் விவரித்தார் .