பெட்டாலிங் ஜெயா, ஜன.18-
இந்நாட்டில் இந்தியர்களின் நலன் தொடர்ந்து பேணிக் காக்கப்படும் என்று துணைப் பிரதமர்  டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நகர்ப்புற வறுமை, தோட்டப்புறங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய வேண்டும் என்பதே தனது நீண்ட கால இலக்கு என்றார் துணைப்பிரதமர்.

இவ்விவகாரம் குறித்து மறைந்த டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ்வுடன் தாம் விவாதித்ததோடு பல்வேறு திட்டங்களை வகுக்கத் திட்டமிட்டதாக இங்கு ரமேஷ் ராவ்விற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரின் இல்லத்திற்கு நேரிடையாக வருகை புரிந்த வேளையில் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

இவரின் பிறந்த நாளான கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி  இந்தியர்கள் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக தாம் இவரை நியமித்ததாகக் குறிப்பிட்ட ஜாஹிட் ,இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பல ஆக்கப்பூர்வ செயல்களை அமல்படுத்த இவர் ஆர்வம் கொண்டிருந்ததாகச் சொன்னார்.

“ இவர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த செயல்களை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றார் ஜாஹிட்.

சிந்தனை மற்றும் பரிவுமிக்க சமூக அமைப்பின் தலைவராக இருந்து பலருக்குப் பல்வேறு வகையான உதவிகள் புரிந்து அவர்களின் மேன்மைக்கு வழி காட்டியுள்ளார் ரமேஷ் ராவ்.

ரமேஷ் ராவ் மாரடைப்பு காரணமாக கடந்த 14 ஆம் தேதி காலமானார். இவரின் நல்லுடல் இங்குள்ள இவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் இன்று  மதிய வேளயில் கம்போங் துங்குவில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மறைந்த ரமேஷ் ராவ்விற்கு மனைவியும் இரு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

அரசியல் பிரமுகர்கள், வர்த்தக சமூகத்தினர், பொது மக்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இவரின் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.