Homeசமூகம்பொக்கிஷம் நிறைந்தது தமிழ் மொழி! -டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்

பொக்கிஷம் நிறைந்தது தமிழ் மொழி! -டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர், பிப். 21-
தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்.

மொழி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது ஓர் இனத்தின் அடையாளம். நம் பண்பாட்டின் விழி. மொழியின்றி சிந்தனையில்லை, சிந்தனையின்றி மனிதன் இல்லை. மனிதனது பிறப்பாலும்⸴ மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும். சங்கம் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்
உலகில் பல்லாயிரம் மொழிகள் இருந்தாலும் ஒருவருக்கு அவரின் தாய்மொழி என்பது தாயை விடச் சிறந்தது என்கிறார் மகாகவி பாரதியார்.

லத்தீன், கீரேக்கம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய உலகச் செம்மொழிகளின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் தமிழ்மொழி, உலகின் மிகத் தொன்மையான மொழி என்று கூறும் போது அதன் பெருமைக்கு அளவே இல்லை. தொன்மை⸴ இனிமை⸴ எளிமை என பல சிறப்புகளைக் கொண்டதுதான் நம் தாய்மொழியான தமிழ் மொழி. எனவே, தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.

சிந்தனை ஆற்றலை வளர்ப்பதும், படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரிகமான சமூக மனிதராக மாற்றுவதும் சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டே அதை மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கம். அந்தக் கல்வியைத் தாய்மொழியில் பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர் என்பது நிதர்சனம்.

சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்வோம். நம் தாய்மொழியான தமிழ்மொழி வெறும் தொடர்புக்கான மொழி மட்டுமல்ல. அது வாழ்வியல் மொழி, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய பொக்கிஷங்கள் புதைந்து கிடைக்கும் மொழி.

எனவே, தாய்மொழி தினத்தில், தாய்மொழியைப் போற்றுவோம்.
தமிழ்மொழியைக் காப்போம்.
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே.

spot_img

latest articles

explore more