கோத்தாபாரு, செப். 26-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் கிளந்தான் மாநிலத்தில் ஜ.செ.க. தனது வேட்பாளர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை இது சாத்தியமானால் கடந்த 31 ஆண்டுகளில் இது முதல்தடவையாக இருக்கும்.

இது குறித்து கிளந்தான் மாநில நம்பிக்கை கூட்டணியின் தலைவர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா கூறுகையில், ஜ.செ.க. கட்சி அம்மாநிலத்தில் தனது வேட்பாளர்களை களமிறக்குவதற்கு ஆர்வம் தெரிவித்திருப்பதாக தெரிவித்தார். கிளந்தானில் காலாஸ், கோத்தா லாமா ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஜ.செ.க. ஆர்வம் காட்டுவதாக மலேசியாகினியிடம் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்தது. பூர்வகுடியினருக்கு (ஓராங் அஸ்லி) அரசாங்கத்தில் பங்கேற்க வாய்ப்பு அளிப்பதற்கான எங்களுடைய அனுகுமுறையாக இதனை கருதுகிறோம். வரும் பொதுதேர்தலில் வெற்றி பெற்றால் இது சாத்தியமாகும் என அந்த வட்டாரம் கூறியுள்ளது.

கோத்தா லாமா தொகுதியில் சீன வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். 30,000 வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சீனர்களாவர். ஆனால், அத்தொகுதி பாஸின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1999 ஆம் ஆண்டிலிருந்து அத்தொகுதியை அனுவார் டான் அப்துல்லா வெற்றி பெற்று வருகிறார். ஒவ்வொரு பொதுதேர்தல்களிலும் ம.சீ.சவின் வேட்பாளர்களை அனுவார் டான் பெரும்பான்மை வாக்குகளில் தோற்கடித்துள்ளார். ஜ.செ.கவின் இந்த எண்ணம் தொடர்பில் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருவதாக வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா குறிப்பிட்டார்.