கோலாலம்பூர், செப்.17-
பெட்டாலிங் சுற்று வட்டாரத்தில் உள்ள பி40 மக்கள் பயனடையும் வகையில் பெட்டாலிங் எஸ்டேட் மாரியம்மன் ஆலயம் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்களை இலவசமாக வழங்கியது.
டான்ஸ்ரீ டத்தோ ஹரிநாராயணனைத் தலைவராகக் கொண்ட பெட்டாலிங் எஸ்டேட் மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தன.
தற்போதைய காய்கறிகள் விலையேற்றத்திற்கு மத்தியில் இவற்றின் விநியோகம் மக்களின் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
இதுபோன்ற சேவையில் ஆலயம் மாதந்தோறும் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட டான்ஸ்ரீ ஹரிநாராயணன் மக்கள் நலன் மீது ஆலய நிர்வாகம் கொண்ட கடப்பாட்டையே இது காட்டுகிறது என்றார்.
இதன் அடிப்படையில் சமூகத்திற்குத் தேவையான பல ஆக்கப்பூர்வ திட்டங்களைத் தாங்கள் தொடர்ந்து வகுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் எஸ்டேட் மாரியம்மன் ஆலயத்திற்கும் அருகில் உள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு.அப்பள்ளி கொண்டாடும் சரஸ்வதி பூஜையை ஆலய நிர்வாகம் ஏற்று நடத்தி மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கி விழாவிற்கு சிறப்பு சேர்த்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி இப்பூஜை சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.