ஷா ஆலம், செப். 20 –
எஸ்.பி.எம். அல்லது எஸ்.டி.பி.எம். தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற
இந்திய மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களில் தாங்கள் விரும்பிய துறை குறிப்பாக மருத்துவ துறையில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் அதிருப்தி தெரிவித்தார்.
இவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை சிறு வயது முதலே மனதில் சுமந்து வருகின்றனர். இதற்காகக் கடுமையாகப் படித்து சிறப்புத் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களுக்கு இனம் மற்றும் பொருளாதார காரணம் காட்டி பல்கலைக்கழக வாய்ப்பு புறக்கணிக்கப்படலாகாது என்றார்.
இதன் பொருட்டு தாங்கள் விரும்பும் துறையில் இவர்கள் மேற்கல்வி தொடர்வதை அரசாங்கமும் கல்வித் துறை சார்ந்த தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.
“பல்கலைக்கழக நுழைவுக்கு மாணவர்களின் கல்வி தகுதி, அவர்களின் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமே தவிர இனப் பின்னணி அல்லது பொருளாதார நிலையைக் கொண்டு அல்ல” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
தாங்கள் விரும்பிய துறை அல்லாமல் வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு வழங்கப்படுவது அவர்களின் எதிர்கால கனவுகளைச் சிதைப்பதாக உள்ளது. அதோடு, மிகச் சிறப்பான கல்வித் தகுதியைக் கொண்ட மற்றும் எதிர்காலத்தில் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மாற்றங்களைக் கொண்ட வரக்கூடிய ஆற்றல்மிக்க இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன
இத்தகைய திட்டமிட்டப் புறக்கணிப்புகள் காரணமாக இளம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். இதனால் கல்வி மட்டுமின்றி சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியாவும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இவ்விவகாரத்தில் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.குறைந்த பட்சம், தேர்வுகளில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காவது உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் வழி அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்..
ஒளிமயமான மலேசியாவின் உருவாக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியவர்கள் சிறந்த மாணவர்களே. ஆகையால், இந்த விவகாரத்தை முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக எண்ணி உரிய நடவடிக்கையை அரசாங்கமும் கல்வி சார்ந்த துறையினரும் எடுக்க வேண்டும் என்றார் அவர்.




