‘பிந்தாங் மின்னல் 2023’ இறுதிச் சுற்று:வெ. 10,000 பெறும் அந்த அதிர்ஷ்டசாலி யார்?

97

கோலாலம்பூர், செப்.21-

நேயர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்த மின்னல் எஃப்எம் வானொலியின்   ‘பிந்தாங் மின்னல் 2023’ இறுதிச் சுற்று இன்னும் சில தினங்களில் அங்காசாபுரி அரங்கைக் கலக்கவிருக்கிறது. 

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அறுவரும் தற்போது  கடுமையான முறையில் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வரும் வேளையில் முதல் நிலை  வெற்றியாளராக 10,000 வெள்ளி பரிசு தொகையைப் பெறும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை அறிந்து கொள்வதில் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

‘பிந்தாங் மின்னல் 2023’ வரும் 23ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் மணி 2.30க்கு தலைநகர், அங்காசாபுரி, ஸ்டூடியோ எம் 1 கோத்தா மீடியாவில் நடைபெறவிருக்கிறது. 

முதல் நிலை வெற்றியாளர் 10,000 வெள்ளியைப் பெறும் வேளையில் இரண்டாவது, மூன்றாவது நிலை வெற்றியாளர் மற்றும் நீதிபதிகள் தேர்வாக ஒரு வெற்றியாளர் மற்றும் இருவருக்கு ஆறுதல் பரிசுகள் என பங்கேற்கும்  அனைத்து 6 பேருக்கும்   பரிசுகள் உண்டு   என்று கூறப்படுகிறது. 

இளம் பாடகர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை இசைத் துறையில் பீடுநடை போடுவதற்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில்  மின்னல் எஃப்எம் முன்னெடுத்துள்ள முயற்சியே  ‘பிந்தாங் மின்னல் 2023’. 

வரும் சனிக்கிழமை நடைபெறும்  ‘பிந்தாங் மின்னல் 2023’   இறுதிச் சுற்றுக்குத் தேர்வான அறுவரின் இசைத் துறை பின்னணியைத் தொடர்ந்து காண்போம்.

ஸ்வேதா நாயர் கிருஷ்ணகுமார். சிலாங்கூர், சுபாங்  ஜெயாவைச் சேர்ந்த 21 வயதான இவர் சிறுவயது முதற்கொண்டே தனது பாட்டியின் வழிகாட்டலுக்கு இணங்க இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு 3 வருடம் இந்திய பாரம்பரிய இசையைக் கற்றுள்ளார். மேலும், மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

ஜீவா ஜெயகோபி (19)  காஜாங்கைச் சேர்ந்தவர்.  இவர் தனது 6 வயதிலிருந்தே சங்கீதம், வீணை மீட்டுதல் மற்றும் கீபோர்ட் வாசித்தல் ஆகிய கலைகளை பயின்றுள்ளார். இவர் இசை சார்ந்த மேடை நிகழ்ச்சிகள், பள்ளி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தொலை தொடர்பு இலக்கவியல் துறையில் கல்வி மேற்கொண்டு வருகிறார்.

மலாக்காவைச் சேர்ந்த 22 வயது இளைஞர்  நிர்மலன் கங்காதரன் .தனது நான்காவது வயதில் சமயநெறிகளை பயின்ற இவர், கோவில்களிலும், இசைக் கச்சேரிகளிலும் திருமுறை பாடியுள்ளார். பிரத்தியேக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், இசையமைப்பின் மீது  ஏற்பட்ட ஆர்வத்தால், தன் சகோதரருடன், இசையமைப்பின் நுட்பத்தையும் கீபோர்ட் வாசிப்பதையும் கற்றுக் கொண்டுள்ளார். பகுதி நேர காப்புறுதி முகவரான இவர், இசைத்துறையில் உயர்கல்வி மேற்கொண்டு வருகிறார்.

 ஸ்ருதி கேசவராஜன் (18) தனது 5 வயதில் தேவாரமும், 11 வயதில் சங்கீதமும் பயின்றுள்ளார். இவர் தேசிய அளவில் திருமுறை மற்றும் அனைத்துலக ரீதியில் கர்நாடக இசை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் சிலாங்கூர், காஜாங்கைச் சேர்ந்தவர்.

சிலாங்கூர், அம்பாங்கைச்  சேர்ந்த 22 வயது ராஜஸ்ரீ கோபி, தனது 5 வயதில் சங்கீதம் பயின்றுள்ளார். பிறகு சங்கீதம் பயில்வதைக் தொடர வாய்ப்பு அமையாமல் போகவே இசை சார்ந்த மேடை நிகழ்ச்சிகள், இயங்கலைப் போட்டிகளில் பங்கு  பெற்றார்.

கோலாலம்பூர் , செராஸைச் சேர்ந்தவர்  பரத் நாயர் (24). இவர் 4 வயதில் கர்நாடக வாய்ப்பாட்டுடன் கடந்த 4 வருடங்களாக மிருதங்க இசையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர்  கணினி அறிவியல்  துறையில் இளங்கலை பயின்று வருகிறார். பாடகர்கள் பிரதீப் குமாரையும், ஷான் ரோல்டனையும் தனது  முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்.