கொள்கை அடிப்படையில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை!அமைச்சர் சிவக்குமார்

41

கோலாலம்பூர், செப்.21-
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது முதலாளிகளின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அரசாங்கம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு கொள்கை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் இன்று அறிவித்தார்.

வங்காளதேச நாட்டில் இருந்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றிய சமீபத்திய அகப்பக்க செய்தி அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், குறிப்பிட்ட தொழில்துறையின் தன்மைக்கு ஏற்றவாறு தொழிலாளர்கள் மற்றும் மூல நாட்டைத் தேர்ந்தெடுப்பதை முதலாளிகள் முடிவு செய்வார்கள்.

“இந்தச் செயல்பாட்டில் அரசாங்கத்தின் எந்தத் தலையீடும் இருக்காது. இன்றுவரை, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முதலாளிகள் தேர்வு செய்ய வங்காளதேசத்தைத் தவிர்த்து இதர 14 நாடுகளையும் மலேசியா கொண்டுள்ளது” என்றார் அவர்.

ஒரு வர்த்தக தேசமாக, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது என்று இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றில் தவறான புரிதல் இருப்பதாக சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.

எனவே, வேலைவாய்ப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால் அமைச்சு இதைத் தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பாக எந்த சமரசமும் செய்யாமல், மனிதர்கள் துன்பப்படுவதை அதிகாரிகள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சிவக்குமார் வலியுறுத்தினார்.

அந்த அகப்பக்க அறிக்கையில், புலம்பெயர்ந்தோர் உரிமை ஆர்வலர் ஆண்டி ஹால் மலேசியாவிற்கு வந்தவுடன் வங்காளதேசத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் கைவிடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் 300,000 க்கும் மேற்பட்ட வங்காளதேசிகள் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும், அதிகமான ஆட்சேர்ப்புச் செலவுகளால் கடன் கொத்தடிமைகளால் “நவீன அடிமைத்தனத்தில்” பலர் சிக்கிக் கொண்டதாகவும் ஹால் மேற்கோள் காட்டியுள்ளார்.

வங்காளதேச தொழிலாளர்கள் ஒரு நபருக்கு 6,000 அமெரிக்க டாலர் (வெ.28,140) அதிகமாகச் செலுத்தியதாக ஹால் கூறினார்.

மற்ற வெளிநாட்டினரின் ஆட்சேர்ப்புச் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது தொடர்பில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த விளக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது