spot_img
11.8 C
London
spot_img
Home சமூகம் செந்தோசா மக்களின் வளமான வாழ்க்கைக்கு 5 முக்கிய திட்டங்கள்!டாக்டர் குணராஜ் அறிவிப்பு

செந்தோசா மக்களின் வளமான வாழ்க்கைக்கு 5 முக்கிய திட்டங்கள்!டாக்டர் குணராஜ் அறிவிப்பு

0
165

கிள்ளான், செப்.27-

ஆகஸ்டு மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் இத்தொகுதி மக்களின் வளமான வாழ்க்கைக்கான 5 பிரதான மேம்பாட்டு திட்டங்களை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவ்வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது முதன்மை திட்டமாக விளங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் வெள்ளப் பிரச்னையை நிர்வகிப்பது, கால்வாய் முறையை மேம்படுத்துவது, ஆற்றின் கொள்ளளவை அதிகரிப்பது, கூடுதல் நீர்பிடிப்பு குளங்களைக் கட்டுதல்,பொது வசதி,பொது பூங்கா, சாலையை அகலப்படுத்துதல்,பாதசாரிகளுக்கான நடைபாதை, பஸ் நிறுத்தம் மற்றும் சாலை சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துதல் போன்ற பணிகள் மீது கவனம் செலுத்த்ப்படும் என்று டாக்டர் குண்ராஜ் தெரிவித்தார்.

அடுத்து, தூய்மை மற்றும் பசுமைத் திட்டமாகும். அதிகமான மரங்களை நடுவது, அதிகமான சமூக காய்கறி தோட்டங்களை அமைப்பது, குப்பைகள் நிர்வகிப்பைக் கண்காணித்தல், தூய்மை மற்றும் பசுமை ஆற்றல் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும்.

மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவது அடுத்த முக்கிய திட்டமாக இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில் குறிப்பிட்டார். ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு, எஸ்.பி.எம். எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றார்.

பி40 மக்களின் வறுமையைத் துடைத்தொழிப்பதும் இந்த 5 மேம்பாட்டு திட்டங்களில் அடங்கும். இதற்காக திறனை மேம்படுத்துவது, அரசாங்க உதவிகளுக்கு ஏற்பாடு செய்வது, இரண்டாவது வருமானத்தை ஏற்படுத்தித் தருவது, தொழிற்பயிற்சி மற்றும் தொழில் முனைவர் பயிற்சிகள் வழங்கப்படும்.

வர்த்தக மையத்தை உருவாக்குவது செந்தோசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது திட்டமாகும். செந்தோசா சட்டமன்றம் முதலீடு மற்றும் தொழிற்பேட்டைப் பகுதியில் அமைந்திருப்பதால் வர்த்தக மையம் அமைவதற்கான சாத்தியத்தை  அது கொண்டுள்ளது.முன்னேற்ற அம்சத்தைக் கொண்ட வர்த்தக வசதியைப் பெற்றிருப்பதால் இப்பகுதி மக்கள் வர்த்தக துறையில் முன்னேற்றம் கண்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார் குணராஜ்.

இதனிடையே, அண்மைய செந்தோசா  சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் டாக்டர் குணராஜ் அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கு, இசை மற்றும்  விருந்துடன் கூடிய இந்நிகழ்ச்சியில் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருந்தவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

அதே வேளையில்,   மேற்கண்ட 5 திட்டங்களின் பொறுப்பாளர்களுக்கான கடிதங்களையும்  டாக்டர் குணராஜ் இந்நிகழ்ச்சியில் வழங்கினார்.