புத்ரா ஜெயா, செப்.28-
செடிகள் மற்றும் பூங்காவிற்கு நீர் பாய்ச்சுவது உட்பட தேவையற்ற நடவடிக்கைகளுக்கு நீர் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தேசிய நீர் சேவை ஆணையத்தின் (ஸ்பென்) 655 ஆவது சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் இத்தருணத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
2006 தேசிய நீர் சேவை ஆணைய தொழிற்துறை சட்டத்தில் ( சட்டம் 655) திருத்தம் ஏற்படுத்தும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தத் திருத்தமானது தண்ணீர் குடிப்பதற்கு அல்லாது மாற்றுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு வகை செய்யும் என்று ஸ்பென் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
“இந்தத் திருத்தத்தின் கீழ் கழிவு நீர் சேவை சுத்திகரிப்பு மற்றும் மறுபயனீட்டு நீர் வெளியேற்றத்தையும் நீர் வள சேவை விநியோகிப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மறுபயனீட்டு நீர் விநியோகிப்பையும் உட்படுத்தியிருக்கும்” என்றார் அவர்.
மற்ற அடிப்படை தேவைகள் போன்றே நீர் துறை மிகப் பெரிய முதலீட்டு செலவீனத்தை உட்படுத்தியிருப்பதோடு தவறான நடத்தை மற்றும் கசிவு போன்ற பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது என்று இங்கு ” அதிகரித்து வரும் நீர் ஒழுங்கு முறை சவால்கள் மற்றும் எதிர்கால மாற்றங்கள் மீதான கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு நீர் சேவை மற்றும் நீடித்த கழிவு நீர் சேவை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக முறை முக்கிய சவாலாகத் திகழ்கிறது என்றார் சார்லஸ்.
“மேற்கோளாக, நீர் சேவைத் துறையில் தவறான நடத்தை, கசிவு முதலியவை குத்தகை பெறுதல், வேண்டியோருக்கு சலுகை காட்டுதல், வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு விவகாரத்தில் பாரபட்சம் காட்டுதல், நிதி கையாடல் போன்ற செயல்களுக்கு வித்திடுகின்றன”.
” இதன் காரணமாக ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோக விவகாரத்தில் நமக்கு வெளிப்படைத் தன்மை போக்கு மற்றும் சிறந்த நிர்வாக முறை ” தேவை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நீர் சேவை தொழிற்துறையின் கட்டுப்பாட்டு நிறுவனம் என்ற முறையில் ஸ்பான் ஊழலுக்கு எதிராக விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்காது என்று சார்லஸ் வலியுறுத்தினார்.




