சைபர்ஜெயா, அக்.9-
மக்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றும் இளைஞர்களுக்கு நகராண்மைக் கழக உறுப்பினர், அரசு சார்பு நிறுவனங்களில் உயர் பதவி போன்ற அனுகூலங்களை வழங்கும்படி சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தரம் குப்புசாமி கேட்டுக் கொண்டார்.
சிறந்த சேவையாளர்களுக்கு இதுபோன்ற பதவிகளை அரசாங்கம் வழங்குவது அவர்களின் சேவையை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் என்று சுந்தரம் குறிப்பிட்டார்.
“எனினும், வெறும் பதவிக்காக மட்டுமே சேவையாற்றுவது உண்மையான சேவையாகாது..சிலாங்கூர் மாநில இளைஞர்களைப் பொறுத்த வரை எந்தவொரு தேவையானாலும் நேர, காலம் பாராது அதனை சிறந்த முறையில் நிறைவேற்றக்கூடியவர்கள்” என்று இங்கு 29 ஆவது சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
“அமரர் துன் சாமிவேலு, டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இந்த வரிசையில் இன்றைய ஆற்றல்மிக்க இளைஞர்கள் ஆளுமைமிக்க தலைவர்களாக நாளை உருவெடுப்பர் என்பது நிச்சயம்.” என்றார் சுந்தரம்.
அண்மைய மாநில தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் மாநில மஇகா இளைஞர் பிரிவினர் ஆற்றிய அளப்பரிய பங்கினை அவர் நினைவு கூர்ந்தார்.
மாநில மஇகா இளைஞர் பிரிவு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வற்றாத ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வரும் இதன் தொகுதி தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தியர்களிடையே மறுமலர்ச்சியை மஇகாவினால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் ரவீன் குமார் சிறப்பு வருகை புரிந்த இம்மாநாட்டை சிலாங்கூர் மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் எம்.பி. ராஜா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் வழங்கப்பட்ட பொறுப்பை சீரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று மாநில மஇகா இளைஞர் பிரிவினரை அவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாநாட்டில் மஇகா கல்வி குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், சிலாங்கூர் மாநில மஇகா தொடர்பு குழு துணைத் தலைவர் டத்தோ ரவிச்சந்திரன், மஇகா தகவல் பிரிவு தலைவர் தினாளன், மஇகா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அண்ட்ரூ டேவிட், செயலாளர் அரவிந்தன் ஆகியோரோடு மாநில இளைஞர் பிரிவு தொகுதி தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் இளைஞர் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.