இளைஞர் பிரிவுக்கு 10 ஆண்டு செயல்திட்டம் அவசியம்!-மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ரவீன் குமார் வலியுறுத்து

59

சைபர் ஜெயா, அக்.10-

மஇகா இளைஞர் பிரிவினர் கட்டுக் கோப்பாகச் செயல்படவும் அளப்பரிய சேவை வழி சமூகத்தை மேம்பாட்டிற்கு இட்டுச் செல்லவும்  10 ஆண்டு செயல்திட்டம் அவசியம் என்று மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கே.ரவீன் குமார் கூறினார்.

அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் இளைஞர் பிரிவு இத்திட்டத்தை வரையும். 10 ஆண்டுகளுக்கு தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் யாவை, அவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் எத்தகைய பங்கை ஆற்றுகின்றன என்பதை  நாம் ஆராய வேண்டும் என்றார் ரவீன் குமார்.

“இளைஞர் பிரிவை வலுப்படுத்த கிளை ரீதியில் உறுப்பினர்களைச் சேர்ப்பதோடு கட்சிக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்களை ஊக்குவிக்க வேண்டும். கடின உழைப்பு, விசுவாசம், நேர்மை போன்ற நேர்மறை குணங்கள் கொண்ட தரமான  சேவையாளர்களே நமக்குத் தேவை “ என்று இங்கு 29 ஆவது சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு பேராளர் மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

“நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இளைஞர்கள். ஆற்றலும் செயல்திறனும் நிறைந்த இவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டி தேவை. அதனை நாம் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்” என்றார் அவர்.

“அண்மைய சிலாங்கூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா இளைஞர் பிரிவினர் கடுமையாகப் பாடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இவ்வேளையில் நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் தேவை மாறுபட்டுள்ளது. உதாரணமாக, ஜொகூர் மாநிலத்தைப் பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, சுற்றுச் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு மிக முக்கியம்  என்றார் தெங்கோரா சட்டமன்ற உறுப்பினரும் ஜொகூர் மாநில சுற்றுலா, சுற்றுச்சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சார குழுவிற்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவீன் குமார்.

இப்பேராளர் மாநாட்டில் சிலாங்கூர் மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் எம்.பி.ராஜா, துணைத் தலைவர் டத்தோ ரவிச்சந்திரன்,  மஇகா கல்வி குழு தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், மஇகா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அண்ட்ரூ டேவிட், மஇகா தகவல் பிரிவு தலைவர் தினாளன், செயலாளர் அரவிந்தன் ஆகியோரோடு மாநில இளைஞர் பிரிவு தொகுதி தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் இளைஞர் பிரிவு பொறுப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “