spot_img
19.6 C
London
spot_img
Home சமூகம் நம்பிக்கை குழுமத்தின் பிரம்மாண்ட விருது விழாக்கள்! அக்.26,27 ஆம் தேதிகளில் நடைபெறும்

நம்பிக்கை குழுமத்தின் பிரம்மாண்ட விருது விழாக்கள்! அக்.26,27 ஆம் தேதிகளில் நடைபெறும்

0
193

கோலாலம்பூர், அக்.11-

நாட்டில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நம்பிக்கை குழுமம் “நம்பிக்கை நட்சத்திர விருதுகள்”,  “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” ஆகிய இரு பிரம்மாண்ட விருது விழாக்களை நடத்தவிருக்கிறது.

கடந்தாண்டு முதன் முறையாக தாங்கள் நடத்திய நட்சத்திர விருது விழா வெற்றியையும்  மக்களிடையே நல்ல வரவேற்பையும்  பெற்றதைத் தொடர்ந்து  இவ்வாண்டும் இந்த விழாவைத் தாங்கள் தொடர்வதாக நம்பிக்கை குழுமத்தின் தோற்றுநர் டத்தோஸ்ரீ முகம்மது இக்பால் தெரிவித்தார்.

இவ்வாண்டு மேலும் ஓர் அங்கமாக “நம்பிக்கை வர்த்தக விருதுகள்” பிரிவு இடம் பெறுவதாகவும் இந்தியர்களின் அடையாளத்தைக் கட்டிக் காப்பதற்காக உழைத்த தொழில் முனைவர்களை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும் இவ்விருது விழா தொடர்பாக தலைநகரில் பிரபல தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

இந்த விருது விழா அக்டோபர் 26, 27 என இரு தினங்கள் இரவு மணி 7.30க்கு கோலாலம்பூர், ஜாலான் டிராவர்ஸ், பேங்க் ராக்யாட் மண்டபம், டேவான் துன் ரசாக்கில் நடைபெறவிருப்பதாக அவர் சொன்னார்.

“நம்பிக்கை வர்த்தக விருதுகள்” பிரிவில் பல்வேறு வர்த்தக பிரிவுகளைச் சேர்ந்த 30 பேருக்கு  விருதுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், நம்பிக்கை நட்சத்திர விருதுகள் பிரிவில் சமுதாய மேம்பாட்டிற்காகத் தங்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்கி வரும் கலை மற்றும் சமூக ஊடக கலைஞர்கள் அங்கீகரிக்கப்படவிருக்கின்றனர். 35 விருதுகள் இவர்களுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

புகழ் பெற்ற மருத்துவர், வழக்கறிஞர், முன்னுதாரண தமிழ்ப்பள்ளி, ஆசிரியர் (கல்வி), சமூக இயக்கம், ஆசிரியர் (நாளிதழ்) ,செய்தியாளர் (நிருபர்), எழுத்தாளர் (ஆய்வு), கல்வியாளர், தன்முனைப்புப் பேச்சாளர், சாதனையாளர், விளையாட்டாளர், மூத்த விளையாட்டாளர் முதலிய விருதுகளும் வழங்கப்படும் என்றார் நம்பிக்கை குழுமத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ இக்பால்.

கடந்தாண்டு ஆறாக இருந்த கலைத்துறைக்கான விருதுகள் இவ்வாண்டு பத்தாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், வானொலி தொகுப்பாளர், புகழ்பெற்ற மூத்த நடிகர் போன்ற விருதுகளும் இம்முறை வழங்கப்படும் என்றும் நம்பிக்கை குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் தெரிவித்தார்.

இது போலவே, கடந்த முறை ஆறாக இருந்த சமூக ஊடக பிரிவினருக்கான விருதுகள் இம்முறை எட்டாக அதிகரிக்கப்பட்டிருப்பதையும் தயாளன் சுட்டிக் காட்டினார்.

கலை, ஊடகம் சார்ந்த 18 விருதுகள் 10 நாட்கள் நடைபெறும் மக்கள் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஐவர் வேட்பாளர்களாகவும் மக்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெறும் நபர் சம்பந்தப்பட்ட விருதைச் தட்டிச் செல்வார் என்றும் கூறப்பட்டது.

இவ்வாண்டு விருதுகள் அங்கத்தில் தமிழ் நாட்டிற்கான கலைத்துறை விருதுகள் இடம் பெறவிருக்கின்றன. நமது கலைஞர்கள் தமிழகத்தில் அங்கீகரிக்கப்படுகின்றனர்.அந்நாட்டு கலைஞர்கள் இங்கு அங்கீகரிக்கப்படும்போது இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொது மக்கள் awards.nambikkai.com.my என்ற அகப்பக்கம் வழி அக்டோபர் 14 முதல் 24 ஆம் தேதி வரை வாக்களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு தயாளன் சண்முகம் (019-9384818), சுஹைனா (010-8833379) அல்லது பார்த்திபன் (016-5624894) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.