spot_img
19.6 C
London
spot_img
Home சமூகம் மண்ணுயிரைத் தன்னுயிராய் நினைப்பது ஒருவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்!-மெய்ப்பித்துள்ளார் கங்கையம்மா ஆறுமுகம்

மண்ணுயிரைத் தன்னுயிராய் நினைப்பது ஒருவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்!-மெய்ப்பித்துள்ளார் கங்கையம்மா ஆறுமுகம்

0
469

கோலாலம்பூர், அக்.12-

பிறர் படும் வேதனையைத் தீர்த்து வைத்து அவர்களின் முகத்தில் சந்தோஷம் படர்வதைக் காண்பதில் தனக்கு தனி மகிழ்ச்சி என்கிறார் வாழ்வில் பல சவால்களைச் சந்தித்து அதில் வெற்றியை நிலைநாட்டியிருக்கும் கங்கையம்மா ஆறுமுகம்.

10 வயதில் கண் பார்வை பாதிக்கப்பட்ட இவர் 15 வயதில் ஆசிரியரின் உதவியுடன் மூக்குக் கண்ணாடியைப் பெற்றார்.ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று மனதில் தேக்கி வைத்திருந்த கனவு குடும்ப பொருளாதார பிரச்னை, பெண்களுக்கு உயர்கல்வி தேவையில்லை என்ற சமூகத்தின் சிந்தனை ஆகியவற்றால் கலைந்தது.

பின்னர் தந்தையின் ஆலோசனையின் பேரில் தனியார் கல்லூரியில் செயலாளர் பயிற்சியை மேற்கொண்டு நிறுவனம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கவே 1999 ஆம் ஆண்டு  பண்டார் சன்வே முருகன் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இடைவிடாது கலை நிகழ்ச்சிகளை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்தாற்போல் நடத்தினார்.

மஇகா முன்னாள் தேசிய தலைவர் அமரர் துன் சாமிவேலுவின் நிதி திரட்டும் திட்டங்களுக்குக் கைகொடுத்தது  உட்பட பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தினார்.இவற்றின் வழி மக்கள் இவரைப் பாராட்டத் தொடங்கியது இவரின் தந்தையை பெருமையுறச் செய்தது.

தந்தையை மனம் குளிர வைத்தது ஒரு புறமிருக்க ஒரு  பெண்ணால் எதையும்  சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய மனநிறைவும் அப்போது இவருக்கு ஏற்பட்டது.

இவரின் சமூக சேவைகளுக்கு திருமணம் முற்றுப்புள்ளி வைத்தது. கங்கையம்மாவின்  கணவர் விக்னேஸ்வரன் ஒரு பொறியியலாளராகப் பணியாற்றினார். மூன்று பிள்ளைகளாகிவிட்ட நிலையில் குடும்பத்தின் தேவைகள் அதிகரித்தன.

நிலைமையைச் சமாளிப்பதற்கு பகுதி நேரமாக காப்புறுதி துறையில் இணைந்த இவர்  பிள்ளைகளின் நலன் கருதி பின்னர் முழு நேரமாக இதில்  ஈடுபடத் தொடங்கினார். தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் இறுகப் பற்றிக் கொண்டு மாடி வீடுகளில் ஏறி இறங்கினார். பலன் ‘சிறந்த ஏஜெண்ட்’ நிலைக்கு உயர்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர் உறவினர்களால் ஏற்பட்ட சட்ட சிக்கலால் கடுமையான  மன உளைச்சலுக்கு இவர் ஆளானார். இந்நிலையில்  காப்புறுதி துறையை விட்டே விலகிவிடலாம் என்ற கசப்பான அனுபவமும் இவரை வாட்டி வதைத்தது.அப்போது இவரின் மூன்று பிள்ளைகளும் கண் முன் நிழலாடவே புத்துணர்வு பெற்று மீண்டும் இத்துறையில் பீடு நடை போடத் தொடங்கினார்.

சிகரத்தின் முதல் படியாக  குரூப் மானேஜர் ஆனார். இந்த வர்த்தகத்தில் தான் அடைந்த அனுகூலங்களை தனது கணவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை வேலை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக காப்புறுதி துறையில் ஈடுபட ஊக்குவித்தார். இன்று அவரும் ஒரு குரூப் மானேஜர். இதன் வழி கணவரை குரூப் மானேஜராக்கிய முதல் பெண் குரூப் மானேஜர் என்ற பெருமையும் கங்கையம்மாவையேச் சாரும்.

மூன்று மாடிகளைக் கொண்ட வீடு, மெர்சடிஸ் பென்ஸ் கார் போன்றவை   காப்புறுதி வர்த்தகம் வழி இவர் அடைந்த சாதனைகளின் பட்டியலாகும். எனினும், இது இவரின் இலட்சியம் கிடையாது, தனது குழுவில் இணைந்திருக்கும் ஏஜெண்டுகள் அனைவரையும் உயர்த்த வேண்டும். இவர்கள் பல குடும்பங்களை  ஆபத்தான தருணங்களில் இருந்து பாதுகாக்க  வேண்டும் என்பதே இவரின் இலக்கு.

“இந்த வர்த்தகம் வழி எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கிறது என்பது முக்கியம் அல்ல. ஒரு குடும்பத் தலைவர் கடுமையான நோயால் பாதிக்கப்படும்போதோ அல்லது மரணத்தைத் தழுவும்போதோ அந்தக் குடும்பத்திற்கு உரிய காப்புறுதி தொகையை வழங்கி அவர்களைப் பாதுகாக்கும்போது எனக்கு கிடைக்கும் நிம்மதி அளவிட முடியாது” என்கிறார் 22 ஆண்டுகளுக்கு மேலாக காப்புறுதி துறையில் முத்திரை பதித்து வரும் கங்கையம்மா.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் கங்கையம்மா வாழ்வில் மேன்மேலும் சாதனைகள் பல படைக்க அநேகனின் வாழ்த்துகள்.