கோலாலம்பூர், செப். 26-
இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை அழைப்பதில் என்ன தவறு உள்ளது? என ம.இ.காவின் தேசிய பொருளாளர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி கேள்வியெழுப்பினார். இது குறித்து நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த சார்லஸ் சந்தியாகோ, பேராசிரியர் பி.ராமசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வேடிக்கையாக உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்தியர்களின் மேம்பாட்டிற்காக தேசிய முன்னணியும் ம.இ.காவும் அளப்பரிய சேவைகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதோடு, செயல்படுத்தியும் வருகிறது. இது மிகப்பெரிய அளவில் பலனை அளிக்கின்றது. ஆனால், ஒன்றும் செய்ய இயலாத எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் விடுக்கும் அறிக்கைகள் கேலிக்கு உரியது.

தேசிய முன்னணிக்குச் சவால் விடும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்தியர்களுக்காக எம்மாதிரியான திட்டங்களை முன்வைத்துள்ளன என்பதை அவர்கள் பட்டியலிட வேண்டும். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும் செயல்பட முடியாதத் தலைவர்களையும் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் இந்தியர்களுக்காக என்ன செய்தார்கள்? அவர்களின் அரசியல் வாழ்க்கையில் இந்திய சமூகத்திற்கு எதையாவது செய்தார்களா வெறும் என்பது சுழியமாகத்தான் இருக்க முடியும். அதுதான் உண்மையும் கூட!

இம்மாதிரியான தலைவர்களை வைத்துக் கொண்டு இந்திய சமூகத்தை குழப்பி தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சியினர் முயல்வது பெரிய இழுக்காகவும் முடியும். மலேசிய வரலாற்றில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்தான் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளார் என உறுதியாகக் கூறலாம் என தமது அறிக்கையில் வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.